தமிழ் சினிமாவின் தரமான சம்பவம் : தனுஷ் – வெற்றிமாறன் நட்பு கூட்டணி
God Light Photographer என்று புகழப்பட்டவர் இந்திய சினிமாவின் ‘மூன்றாம் பிறை’ பாலுமகேந்திரா, தனது உதவி இயக்குனர்கள் பற்றி இப்படிச் சொல்வார். “என்னிடமிருந்து புறப்படும் விதைகள் வீரியமானவை..” அந்த வார்த்தைகளை இன்றளவும் அழுத்தமாக நிரூபிக்கிற ஒருவர் வெற்றிமாறன். பாலு மகேந்திராவின் உதவியாளர்களில் தனித்துவம் மிக்கவர். “இனிமே உங்ககிட்ட வேலை செய்யமாட்டேன்., நீங்க ஒரே மாதிரி படம் பண்றீங்க” என்று தன்னிடம் ஒரு சின்னப் பையன் கோபித்துக்கொண்டு போய்விட்டதாக, ஒருமுறை பாலுமகேந்திரா தன் நண்பரிடம் கூறி கண்கலங்கி வருந்தினார். அவர் சொன்ன சின்னப்பையன் தான் இந்த வெற்றிமாறன்.
பிரியாமணி மற்றும் தனுஷை வைத்து ‘அது ஒரு கனா காலம்’ என்றொரு படத்தை பாலு மகேந்திரா இயக்கினார். அதில் வெற்றிமாறன் உதவி இயக்குனர். படப்பிடிப்பு சமயத்தில் “டேய் அந்தப் பையன் நான் டயலாக் சொல்லி குடுத்தா கொஞ்சம் பயப்படுறான் போல, நீயே டயலாக் சொல்லி குடுடா” என பாலுமகேந்திரா வெற்றிமாறனிடம் சொல்ல. அப்படத்தில் தனுஷிற்கு டயலாக் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பு வெற்றிமாறனுக்கு கிடைக்கிறது. இப்படித்தான் தனுஷும் வெற்றிமாறனும் நண்பர்களாக இணைந்தனர். ஆனால் ஒரு பேட்டியில் வெற்றிமாறன் “நான் உதவியாளரா இருந்தப்ப எனக்கும் தனுசுக்கும் அடிக்கடி சண்டை வரும்…” எனவும் குறிப்பிட்டிருந்தார். எதிர்காலத்தில் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவை கட்டியாளப்போகும் ரகசியத்தை காலம் அப்போது அவர்கள் காதில் சொல்லியிருக்கவில்லை.
பாலுமகேந்திராவிடம் இருந்து வெளியே வந்த பிறகு, வெற்றிமாறன் தனியாக படம் பண்ண முயற்சிக்கிறார். பொல்லாதவன் கதையை தனுஷிடம் சொல்ல படம் 2007’ஆம் ஆண்டு வெளியாகிறது. அந்தப் படத்தில் தனுசுக்கு இணையாக நடிப்பில் டஃப் கொடுத்த கதாபாத்திரமாக பல்சர் பைக் வலம் வந்தது. பெய்ஜிங் பை சைக்கிள் என்ற சீன படத்தின் பாதிப்பு நிறையவே பொல்லாதவன் படத்தில் இருந்தது. உண்மையில் அட்டகாசமான சென்னை கமர்சியல் ப்ளாக் பஸ்டராக அமைந்த இந்தப்படம் வெற்றிமாறனின் சினிமா கெரியரில் பெரிய பெரிய கதவுகளை திறந்து வைத்தது. பைக் இருந்தாத் தான் வேலை கிடைக்கும் என அப்பாவிடம் டிமாண்ட் செய்யும் சராசரி மிடில் கிளாஸ் பையனாக அறிமுகமாகும் தனுஷ் இறுதியில் வட சென்னையின் முக்கிய தாதா சாம்ராஜ்ஜியத்தின் வேரையே காலி செய்யும் நாயகனாக விஸ்வரூபம் எடுப்பார்.
அதற்கு அடுத்த பாய்ச்சலாக ஆடுகளம் அமைந்தது., 2011’ல் வெளியானது ஆடுகளம், இதில் மீண்டும் இணைந்த தனுஷ் வெற்றிமாறன்., தென் தமிழகத்தின் வாழ்வியலை தெற்கின் மனிதர்களுக்கு இடையே இருந்த உறவை, உடல்மொழியை, வட்டார வழக்கை, துரோகத்தை அப்படியே திரையில் வரைந்து சாகசம் செய்தனர். சேவல் சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் 6 தேசிய விருதுகளை அள்ளியது. அதற்கு தகுதியான உழைப்பை அப்படத்தில் அனைவரும் கொடுத்திருந்தனர். ஆடுகளம் படத்தின் கதாநாயகி டாப்சி. ஐரின் என்ற பெயரில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வருவார்.
மதுரை மண்ணை வேறு கோணத்தில் பதிவு செய்த அசுரத்தனமான கதை சொல்லி மறைந்த எழுத்தாளர் ஜி.நாகராஜன் ‘நாளை மற்றுமொரு நாளே’ என்றொரு நாவலை எழுதினார். தமிழ் இலக்கியத்தளத்தில் ஜி.நாகராஜனின் இடத்தை யாரும் அத்தனை எளிதில் நெருங்கிவிட முடியாத என்று விவாதிக்கும் அளவிற்கு முக்கியமான நாவலாக அது இருந்தது. அக்கதையில் வரும் ஒரு ஆங்கிலோ இந்தியப்பெண்ணின் பெயர் ஐரின். அதைத்தான் வெற்றிமாறன் ஆடுகளத்தில் பயன்படுத்தியிருப்பார். உண்மையில் தமிழ் சினிமாவின் முக்கிய கதை சொல்லிகள் அனைவர் மத்தியிலும் ஜி.நாகராஜனின் பாதிப்பு இருக்கும். எச்.விநோத் இயக்கிய சதுரங்க வேட்டை படத்தில் பல வசனங்கள் ஜி.நாகராஜனுடையது. சதுரங்க வேட்டை படத்தின் டைட்டிலில் எச்.வினோத் அதனை குறிப்பிட்டு மரியாதை செய்திருப்பார். நல்ல சினிமா எடுக்க நல்ல இலக்கியங்களை படிக்க வேண்டும் என்பது பாலு மகேந்திராவின் நம்பிக்கை. அதனை தன் உதவியாளர்களுக்கு அவர் சொல்லியே வளர்த்தார். அதனை இறுக்கமாக இன்றளவும் பற்றிக் கொண்டிருப்பவர் வெற்றிமாறன். வெற்றிமாறன் தன் உதவியாளர்களின் வார்த்தைகளுக்கு முறையான மரியாதை கொடுப்பவர். ஆம் ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரனாக நடித்திருப்பார் ஈழத்துக் கவிஞர் ஜெயபாலன், கதை விவாதத்தில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்துக்கு ஜெயபாலன் பொருத்தமாக இருப்பார் எனப் பரிந்துரை செய்தது வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தான். அதனை அப்படியே ஏற்றுக் கொண்டார்.
ஆடுகளம் படத்தில் மதுரையின் வட்டார வழக்கு அச்சு அசலாக அப்படியே பேசியிருப்பார் டிபிகல் சென்னை பையனான தனுஷ். இதற்குப் பக்கபலமாக இருந்தது மதுரை மண்ணைச் சேர்ந்த வெற்றிமாறனின் உதவியாளர் விக்ரம் சுகுமாறன். இவர் தான் பின்னாளின் மதயானைக் கூட்டம் திரைப்படத்தை இயக்கியவர். ஆடுகளத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி வட சென்னையில் சந்தித்துக் கொண்டனர். சென்னை அவர்களின் களம். அதனால் இருவரும் இன்னும் நின்று விளையாடியிருப்பார்கள். தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி என பலமான கூட்டணி அமைத்து., வட சென்னையின் கருப்பு பக்கத்தை தனக்கேயான பாணியில் திரையில் எழுதினார் வெற்றிமாறன். உண்மையில் ஒரு டைம் மெசினில் ஏறி சில தசாப்தங்கள் பின்னோக்கி பயணித்த அனுபவத்தை அந்தப்படம் கொடுத்தது. என்றாலும் வட சென்னை தமிழகத்தின் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தவில்லை. உண்மையில் எந்த ஒரு படைப்பை 100 சதவிகிதம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்களோ. அது நேர்மை தவறிய படைப்பாகும். ஒரு சினிமா ஒரு விவாதத்தை உண்டு செய்யவேண்டும். சரி தவறு, ஆம் இல்லை என பொது சமூகம் எந்தப் படைப்பைப் பற்றி அதிகம் பேசுகிறதோ அதுவே நேர்மையான படைப்பு அந்த வகையில் வட சென்னை அசலான நேர்மைக்காரன்.
இயக்குனர் நடிகர் என்பதைத் தாண்டி வெற்றிமாறானும் தனுஷும் இணைந்து தயாரித்த படங்களும் வெற்றிதான். மணிகண்டன் இயக்கி 2015’ல் வெளியான காக்கா முட்டை படத்தை வெற்றிமாறனும் தனுசும் இணைந்து தயாரித்தனர். இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளியது. அதே போல வெற்றிமாறன் இயக்கிய விசாரணை திரைப்படமும் இருவரின் தயாரிப்பு தான். மு.சந்திரக்குமார் எழுதிய லாக்கப் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று வென்றது. ஆஸ்கர் கதவையும் தட்டியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இவ்விருவரின் கூட்டணியில் திரைக்கு வந்திருக்கும் படம் அசுரன். சாகித்த அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சமூகத்தில் பெரிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. உண்மையில் கரிசல் மண்ணின் வெப்பத்தை உள்வாங்கி அழக்காக திரைக்கதை அமைத்து இதனையும் ஒரு வெற்றிப்படமாக மாற்றியிருக்கிறார் வெற்றிமாறன்.
இந்தப்படம் சர்வ நிச்சயமாக தேசியவிருது பெறும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். முதல் வெற்றிக்காக உழைப்பதில் ஒரு பொருளாதார அழுத்தம், புகழ் மீதான ஆசை என எல்லாம் இருக்கும். ஆனால் வெற்றியின் உயரத்திற்கு சென்ற பிறகும் சற்றும் பின்வாங்காமல் மீண்டும் மீண்டும் முதல் படத்திற்கு உழைப்பது போலவே உழைப்பதென்பது கலையின் மீதான அன்பால் நிகழ்வது. அதனை தொடர்ந்து வெற்றிமாறனும் தனுசும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ்சினிமாவின் ஆரோக்கியமான போக்கை தீர்மானிக்கும் சக்திகளாக இவர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
(சுப்ரமணி)