தயாரிப்பாளர் சம்பள பிடித்தம்: ‘மாநாடு’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நிறுத்திய வெங்கட் பிரபு
சிம்புவின் 'மாநாடு' திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளன.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ’மாநாடு’ படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்திற்கான வேலைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தன. இந்த நிலையில் ஜூலை 9 ஆம் தேதியுடன் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. இதையடுத்து இறுதி கட்ட பணிகளை தொடங்க திட்டமிட்டனர். ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொரோனா காலத்தால் இப்படத்தில் பணியாற்றிய இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட அதிகம் சம்பளம் வாங்கிய கலைஞர்களிடம் 30 சதவீத சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டுகோள் வைத்திருக்கிறார். தயாரிப்பாளரின் இந்த கோரிக்கையை பலரும் ஏற்கவில்லை.
குறிப்பாக, ’ஒப்பந்தப்படி தன்னுடைய முழு சம்பளத்தையும் வழங்கினால்தான், இறுதிக்கட்ட படங்களை தொடங்குவேன் என்று இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பாளரிடம் கூறிவிட்டார்’ என திரைத்துறையில் கூறுகின்றனர். இதனால், மாநாடு திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் இன்னும் தொடங்காமல் உள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடமும் பேச்சுவார்த்தை நடத்து வருவதாக தெரிகிறது.
அதேவேளையில், எந்தப் பிரச்னையும் இல்லை; இறுதிகட்ட பணிகள் தொடர்வதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார்.