எனக்கு சினிமா சரியாக அமையாத காலத்தில் என் திரியை தூண்டியவர் தாமிரா: சீனு ராமசாமி உருக்கம்

எனக்கு சினிமா சரியாக அமையாத காலத்தில் என் திரியை தூண்டியவர் தாமிரா: சீனு ராமசாமி உருக்கம்
எனக்கு சினிமா சரியாக அமையாத காலத்தில் என் திரியை தூண்டியவர் தாமிரா: சீனு ராமசாமி உருக்கம்

மறைந்த இயக்குநர் தாமிராவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாததையொட்டி இயக்குநர் சீனு ராமசாமி உருக்கமுடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

’ரெட்டைச்சுழி’, ‘ஆண் தேவதை’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தாமிரா கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரின் நினைவஞ்சலி கூட்டத்தையொட்டி இயக்குநர் சீனு ராமசாமி உருக்கமுடன் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “அனைவருக்கும் வணக்கம். தங்களோடு பயணித்த ஒரு படைப்பாளியை நினைவுக்கூற நினைத்த உங்கள் பெரு உள்ளத்திற்கு இந்த வணக்கம். அன்பின் காணிக்கை.

ஒருமுறை ஒரு மேனேஜர் வேண்டும் சீனு என்றார் இயக்குநர் தாமிரா. என் உடலில் பாகமாக இருக்கும் நண்பன் ஜாகீர் உசேனை அனுப்பி என்னுடன் நீ இருப்பதை போல அவருடன் இரு என்றேன். ஒரு வருடம் கழித்து ’ஜாகீரை தந்தமைக்கு நன்றி’ என்றார்.

கொரோனா காலத்திற்கு முன்பு ஒரு உதவி இயக்குநர் வேண்டும்’ என்றார். என் மீது மையல் கொண்டு என்னிடம் வந்து சேர முயன்ற இளைஞன் ஒச்சுமாயியை அனுப்பினேன். அந்த தம்பிதான், அவரின் மருத்துவமனை நாட்களை ஒவ்வொரு நாளாக நம்பிக்கையாக சொல்லிக்கொண்டே வந்தான். ஆனால்,  இதய தசைகள் கிழிபட ’தாமிரா சார் நம்மை விட்டுட்டு போய்ட்டார்’ சார் என்று அலைபேசியில் அழுதான்.
அன்று முழுவதும் அமைதியாக இருந்தேன். அவர் அட்மிட் ஆகியிருந்த ஆஸ்பத்திரியின் வாசலை இப்பவும் கடக்க நேர்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை நினைக்கும் என் மனம்.

"சீனு உங்ககிட்ட இருக்கிற கவிதை உணர்ச்சி… அது ஸ்கீரின் ப்ளேல வருது.. அது இருக்கிற வரைக்கும் உங்களுக்கு தோல்வி இல்ல.. உடம்ப மட்டும் பாத்துக்கங்க சீனு" என்றார். உலகம் என்னை கைவிட்ட ஓர் நாளில் அவரிடம் இருந்து எனக்கு வந்த வார்த்தைகள் இவை. உலகம் மட்டுமல்ல என்னை நானே அப்போது கைவிட்டிருந்தேன். சரிங்க சார் என்று மட்டும் சொன்னேன். என் உடலை சுமக்க முடியாமல் நடந்து அலைந்து கொண்டிருந்த அன்று உயிர் சுமந்து காற்றில் நடந்து வீடு வந்தேன். பிறந்து மூனுமாதம் ஆன என் மூத்த மகளின் அருகே படுத்து நிம்மதியாக தூங்கினேன். அந்நாள் இந்நாள் போல் நினைவில் இருக்கிறது. நன்னம்பிக்கை தரும் நண்பன் தாயை போல் உயர்ந்தவன். இதுதான் இயக்குநர் தாமிரா. அவர் நேசித்த தாமிரபரணி ஆறும் அப்படியானதுதான்.

இயக்குனர் தாமிரா அவர்களை நான் முதன் முதலாக பார்த்தது 1997ம் ஆண்டு அண்ணன் சீமான் அவர்களின் சாலிகிராமம் வீட்டில். ஒரு எழுத்தாளராக அறிமுகமானார் . சி.பி.ஐ கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவராக அறிந்து நெருங்கி அவருடன் நட்பிக்கத் தொடங்கினேன். நானும் இலக்கிய ஆர்வமுடையவனாக தென்பட்டதால் அவரும் என் அருகாமையை விரும்பினார். பிறகு சந்திக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவருடன் பயணித்திருக்கிறேன். அவர் தொலைக்காட்சி தொடர்களுக்கு இரவு பகலாக உழைப்பதை நான் ஆச்சர்யமாக கவனித்திருக்கிறேன். எப்போதும் எளிமையாகவும் அன்பான மனிதராகவும் அவர் இருந்தார்.

அவர் பெற்ற குழந்தைகளை சிறுவயதில் வடபழனி வீட்டில் என்னுடைய பெண்டக்ஸ் கே 1000 கேமராவால் படங்கள் எடுத்து மகிழ்ந்திருக்கிறேன். எப்போது சந்தித்தாலும் இலக்கியம் சினிமா என பேசி களைத்திருக்கிறோம். அவர் எப்போதும் நேற்றை பற்றி கவலையற்றும் நாளை பற்றிய நம்பிக்கையோடும் இருந்தவர். சதா இயங்கிய படி இருக்கும் தன்னம்பிக்கையாளர். எப்போதும் தனக்கு வேலை தந்தபடி இருப்பார்.

என் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை மிகவும் முக்கியமானது. தோற்றவனுக்கு பிரியமாக தரும் சிகரெட் போல எனக்கு ரொம்ப முக்கியமானது. அவர் கோல்டுபிளேக் கிங்ஸை எனக்கு நீட்டி "வாங்க சீனு" என்பார். பின்பு சிகரெட் குடிப்பதை அறவே நிறுத்தி, அதற்கு எதிராக என்னிடம் பிரச்சாரமும் செய்தார். புகைப்பவர்களுக்கு தெரியும் அந்த உறுதி எத்தகையதென்று.
முதல் சினிமா சரியாக அமையாத காலத்தில் என் திரியை தூண்டியவர் இயக்குனர் தாமிரா.. தாமிரா ஒரு நல்ல ஆன்மா. தன் தந்தையை பெருமையாக கொண்டாடியவர். தன் சொந்த ஊரை நேசித்த கலைஞன். தலைக்கணம் இல்லாத மனிதன். வசந்தகால மரத்தை வேரோடு பிடிங்கிய மாதிரி அவரை காலம் எடுத்து சென்று விட்டது.

என் படப்பிடிப்புக்கு அவர் தந்தையோடு வந்து மகிழ்ந்த அந்நாளின் திருவிழாவை எப்போதும் மறவேன். அவர் சிரிப்பில் எப்போதும் ஒரு இளவெயிலை உணர்ந்திருக்கிறேன். இப்போதும் இக்கணத்திலும். தாமிரா சார்.. உங்கள் புகழ் வாழ்க..
நீங்கள் நடந்து பாதங்களால் உருவாக்கிய நல்லுணர்வுமிக்க ஒற்றையடிப்பாதையில் உங்கள் சந்ததிகள் வளர்க. தன் விவசாய நிலத்தில் காலூன்றி நிற்கும் உங்கள் தந்தை வாழ்க.. வாழ்க வாழ்க அன்புமிகுந்த தோழரே நீர் வாழ்க. நீங்கள் எப்போது அழைத்தாலும் உங்கள் அலைபேசியை எடுக்க காத்திருப்பேன். சீனு ராமசாமி.” என்று முடியும் இயக்குநர் சீனு ராமசாமியின் இந்தக் கடிதம் இருவருக்குமான ஆழமான நட்பை காட்டுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com