லீனா மணிமேகலையின் பாலியல் புகார்.. ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு சுசி கணேசன் வழக்கு
பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
'திருட்டுப் பயலே', 'கந்தசாமி' ஆகிய பிரபல படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இவர் மீது கவிஞரும் எழுத்தாளருமான லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டரில் மீடூ இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பேசு பொருளாக மாறி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கவிஞர் லீனா மணிமேகலை, பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2017-ஆம் ஆண்டு தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்த பதிவு ஒன்றை லீனா மணிமேகலை எழுதியுள்ளார். அதை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து, தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியது இயக்குநர் சுசி கணேசன் என குறிப்பிட்டு பகிர்ந்தார்.
லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமென சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார். மேலும் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்றும் சுசி கணேசன் கூறியிருந்தார்.
இந்நிலையில் தன் மீது பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், சுசி கணேசன் ஒரு ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கும் விளைவிக்கும் வகையில் லீனா மணிமேகலை புகார் கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு ரூபாயை இழப்பீடாக கேட்டுள்ளது பற்றி புதிய தலைமுறையிடம் பேசிய சுசி கணேசன், குற்றமற்றவன் என நிரூபிக்கவே வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், எனவே, பணத்தை பெரிதுபடுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எனவே சுசி கணேசனின் மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றன.