திரையுலகத்தில் கையாளுவதற்கு கடினமான ஒரு வடிவம் என்றால் அது நகைச்சுவை வடிவம் தான். அதிரடி திரைப்படங்கள், நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படங்கள் என எடுத்து வெற்றிபெறும் பல இயக்குநர்களாலும் காமெடி என்ற ஜார்னரை சரியாக கடத்த முடியாமல் போகும். அதிலும் ஒரு படத்தை நகைச்சுவையாகவும் கொடுத்து பீல் குட் மூவியாகவும் கொடுத்துவிட்டால், அந்தப்படம் காலத்திற்கும் விருப்பமான படமாகவே ரசிகர்களிடம் தொற்றிக்கொள்ளும். அப்படி நகைச்சுவை ஜார்னரில் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் தான் இயக்குநர் சித்திக்.
1986-ல் மலையாள படங்களான பாப்பன் பிரியப்பேட்ட பாப்பன், நாடோடிக்கட்டு போன்ற படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதிய சித்திக், கக்கோதிக்காவிலே அப்பூப்பன் தாவிக்கல் என்ற படத்திற்கு உதவி இயக்குநராக பணிபுரிந்தார். பின்னர் 1989ஆம் ஆண்டு வெளியான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதற்குபிறகு அவர் இயக்கிய காட்ஃபாதர் திரைப்படத்திற்கு ஸ்டேட் அவார்ட் வழங்கி கேரள அரசு கவுரவித்தது. மொத்தமாக 20 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள அவர், தமிழில் பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, சாதுமிரண்டா மற்றும் காவலன் போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
மலையாளத்தில் பிரண்ட்ஸ் என்ற பெயரில் அவர் இயக்கிய படத்தை அப்படியே தமிழில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி மற்றும் வடிவேலுவை வைத்து சூப்பர் டூப்பர் ஹிட் காமெடி ஜார்னர் மூவியாக விருந்துவைத்திருப்பார் சித்திக். அதிலும் வடிவேலு கதாபாத்திரமான நேசமணி கேரக்டர் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்தளவு நேசமணி என்ற கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
திரைப்படத்தில் வரும் அத்தனை நகைச்சுவை காட்சிகளும் சித்திக் உருவாக்கியது தான். நகைச்சுவை காட்சிகளில் மிரட்டும் வடிவேலுவுக்கே ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ப எப்படி நடிக்க வேண்டும் என்று நேசமணியை செதுக்கியவர், இயக்குநர் சித்திக் தான். இதை இண்டர்வியூ ஒன்றில் வடிவேலுவும் தெரியபடுத்தியிருப்பார்.
நகைச்சுவை வடிவத்தில் வித்தகரான சித்திக் மீண்டும் எங்கள் அண்ணா திரைப்படத்தில் நம்மை சிரிக்க வைத்திருப்பார். அந்தப்படம் பெரிய ஹிட்டாகவில்லை என்றாலும் அதில் வரும் ஒவ்வொரு நகைச்சுவை காட்சிகளும் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறது. அதேபோல விஜய்யின் சறுக்கலான காலகட்டத்தில் காவலனாக கொண்டுவந்த சித்திக், பழைய சார்மிங் விஜய்யை மீண்டும் கொண்டுவந்து நம்மை ரசிக்கவைத்திருப்பார். ஃபீல் குட் மூவியாக வெளிவந்த காவலன், விஜயின் வளர்ச்சியில் முக்கியமான இடத்தை பிடித்தது.
69 வயதான சித்திக் ஏற்கனவே நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்னைக்காக சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.