கார்த்திக் சுப்புராஜுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த ஷங்கர்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து நேரில் வாழ்த்தியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
’பீட்சா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்து தமிழின் முன்னணி இயக்குநரானார் கார்த்திக் சுப்புராஜ். தற்போது தனுஷுடன் ’ஜகமே தந்திரம்’ படத்தை முடித்துவிட்டு விக்ரம் மற்றும் துருவ் விக்ரமுடன் இணைந்து ’விக்ரம் 60’ படத்தை இயக்கி வருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத ’விக்ரம் 60’ படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா, வாணி போஜன், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். துருவ் ஹீரோவாகவும் விக்ரம் வில்லனாகவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நேற்று கார்த்திக் சுப்புராஜ் தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். நேற்று முழுக்க சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவந்த நிலையில், தனது பிறந்தநாளை ‘விக்ரம் 60’ படக்குழு மற்றும் இயக்குநர் ஷங்கருடன் கொண்டாடியுள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “ஒவ்வொருவரும் தங்கள் ஆசிர்வாதங்களையும் அன்பையும் பொழிந்து எனது பிறந்தநாளை சிறப்பாக்கியதற்கு நன்றி. மறக்க முடியாத நாளாக மாற்றிய ’சியான் 60’ குழுவிற்கும் நன்றிகள். திடீர் சர்ப்ரைஸ் விசிட் செய்து வாழ்த்திய ஷங்கர் சாருக்கும் நன்றிகள்” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.