’விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம்..’ - இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை
பிக்பாஸ் 10வது சீசனில் கண்டஸ்டண்டுக்கு அறிவுரை கூறிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம், வாக்குறுதி, பொறுப்பு குறித்து பேசிய வீடியோ வைரலாகி, அது தமிழக முதல்வர் விஜயை குறிக்கிறது என சிலர் கூறி சர்ச்சை கிளப்பினர். இதனால் விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி, இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி உரை மட்டுமே, விஜய் சேதுபதி மீதான தனிப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்துவழங்கி மிகப்பெரிய ஹிட்டடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவருகிறார். அந்தவகையில் சமீபத்தில் தொடங்கியிருக்கும் 10வது பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கிவருகிறார்.
இந்நிலையில் கடைசி பிக்பாஸ் எபிசோடில் கண்டஸ்டண்ட் ஒருவருக்கு அறிவுரை வழங்குவது போல் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, தமிழக அரசியலை சுட்டிக்காட்டுவது போல் ‘வாக்குறுதிகள், லீடர், லீடர்ஷிப்புக்கான தகுதி’ என சில விசயங்களை பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இணையத்தில் வலம்வரும் அந்த வீடியோவில் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, “தலைவன் என்றால் என்னவென்றே தெரியாமல், தலைமைத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல், வாய்க்கு வந்ததுபோல வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது, எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது என்பது தலைவனுக்கான பண்பு இல்லை. அது ஏமாற்று வேலை” என பேசியிருந்தார்.
இந்தவீடியோ கிளிப் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், பலர் முதல்வர் விஜயை தான் மறைமுகமாக விமர்சித்து பேசியிருக்கிறார் என கருத்திட்டு பரப்பிவருகின்றனர். இதனால் விரக்தியடைந்த விஜயின் ரசிகர்கள் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பேசுபொருளான நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி விஜய்சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, “அனைவருக்கும் அன்பான வணக்கம்.
விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல.
உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.
ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது.
புதியவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர்,
தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர்,
நிறைய புதிய இயக்குனர்களோடு பயணித்தவர்,
100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர்,
பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.
முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

