
”பெண்ணுக்கு தந்து மணம் முடித்த காலம் எதனால் திசை திரும்பியது?” என்று வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் திரைப்படங்களை எடுத்து வரும் இயக்குநர் சீனு ராமசாமி, வரதட்சணை கொடுமைக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா என்ற பெண் வரதட்சணைக் கொடுமையால் மர்மமான முறையில் உயிரிழந்தார். கேரளாவையே உலுக்கியுள்ள இச்சம்வத்தைக் கண்டித்து பிரபலங்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று தனது ட்விட்டரில் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக கனிமொழி எம்பி பாரதியாரின் வரிகளைப் பகிர்ந்திருந்தார்.
அதனை ரீட்வீட் செய்துள்ள இயக்குநர் சீனு ராமசாமி “அம்மான் வீட்டுப் பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா ? அரிசி பருப்பு சீர் செனத்தி அள்ளிக் கொடுக்க வேணாமா? கவியரசர் கண்ணதாசன் எழுதிய இப்பாட்டு நினைவில் வந்தது. பெண்ணுக்கு தந்து மணம் முடித்த காலம் எதனால் திசைதிரும்பியது? கேள்வியால் ஒரு வேள்வி செய்தீர்” என்று வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக அழுத்தமாக தனது நிலைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். திமுக எம்பி கனிமொழியின் ட்விட்டை மேற்கோள் காட்டி அவர் இந்த பதிவினை எழுதியுள்ளார்.