'திமுகவில் உள்ள சாதி பாகுபாட்டை களைவதற்கான வேலையை ’மாமன்னன்’ மூலம் உதயநிதி ஆரம்பிப்பார்'- பா.ரஞ்சித்

திமுகவில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை களைவதற்கான வேலையை ‘மாமன்னன்’ திரைப்படத்தின் வாயிலாக உதயநிதி ஸ்டாலின் ஆரம்பிப்பார் என்று நம்புவதாக இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
பா.ரஞ்சித்
பா.ரஞ்சித் கோப்பு படம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த 29 ஆம் தேதி வெளியான இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் மூன்றே நாட்களில், உலகம் முழுவதும் 28 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘மாமன்னன்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் சூழலில், இயக்குநர் பா.ரஞ்சித் 'மாமன்னன்' படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

பா.ரஞ்சித் - உதயநிதி ஸ்டாலின்
பா.ரஞ்சித் - உதயநிதி ஸ்டாலின்

உண்மையாகவே தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன? அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com