யுவன் சங்கர் ராஜா - இயக்குநர் ராம்
யுவன் சங்கர் ராஜா - இயக்குநர் ராம்web

”எனக்கும் யுவனுக்கும் எந்த மோதலும் இல்லை.. திட்டி மெசேஜ் பண்ணாதீங்க” - இயக்குநர் ராம்!

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’பறந்து போ’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஏன் யுவன் சங்கர் ராஜா வேலை செய்யவில்லை என்பதற்கு இயக்குநர் ராம் விளக்கம் கொடுத்துள்ளார்.
Published on

எதார்த்தமான கதைக்களத்தை எடுத்து அதை அழுத்தமான காட்சிகளுடன் ரசிகர்களுக்கு விருந்தாக படைக்கும் இயக்குநர் ராமிற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. எப்போதும் "கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" போன்ற அழுத்தமான படங்களை கொடுத்த ராம், தற்போது தந்தை-மகனுக்கு இடையேயான உறவு சார்ந்து காமெடி பின்னணியில் ‘பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி. அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜாவிற்கு பதிலாக சந்தோஷ் தயாநிதி படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆனால் இப்படத்திற்கான பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா செய்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

யுவனுக்கும் எனக்கும் எந்த சண்டையும் இல்லை..

’பறந்து போ’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராம் படத்தில் ஏன் யுவன் சங்கர் ராஜாவால் இசையமைக்க முடியவில்லை என தெளிவுபடுத்தினார்.

யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும் என பேசிய ராம், “ஏன்னா தினமும் கெட்ட வார்த்தையில் ராம் டேஷ் டேஷ் என மெசேஜ் பண்ணிட்டே இருக்காங்க. எனக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை, பறந்து போ படத்திற்கு இசையமைப்பாளரா முதலில் யுவன் தான் இருந்தார். அதற்கான முன்பணத்தையும் அவரிடம் கொடுத்தோம்.

திடீரென மதன் கார்கி வந்து இந்தப் படத்தில் பாடல்கள் நிறைய வைக்கலாம், அதற்கான கதைக்களம் இருக்கிறது, ஜிங்கிள்ஸ் மாதிரி பண்ணலாம் என்று சில கார்டூன்களையும் காட்டினார். ஆனால் அந்த நேரத்தில் யுவன் துபாயில் இருந்தார், அவரிடம் அப்போது கோட் படம் உட்பட நிறைய படங்கள் இருந்தன. அதனால் அவரிடமிருந்து பாட்டு வாங்குவது சிரமமாக இருந்தது, பின்னர் அவரேதான் சொன்னார் படத்திற்கு பாடல்களை சந்தோஷ் தயாநிதி வைத்து செய்துகொள்ளுங்கள். பின்னணி இசையை நான் செய்துதருகிறேன் என்று கூறினார். அப்படி ஒரு இக்கட்டான நிலைமையில் காப்பாற்ற வந்தவர் தான் சந்தோஷ் தயாநிதி.

அதனால் எனக்கும் யுவனுக்கும் எந்த மோதலும் இல்லை, நான் அவரைத்தான் இசையமைக்க சொன்னேன், அவரால் தான் இசையமைக்க முடியவில்லை, இனிமேல் எனக்கு திட்டி மெசேஜ் பண்ணாதீங்க” என்று கலகலப்பாக பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com