‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் உக்ரைன் படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய ராஜமெளலி
ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் உக்ரைன் படப்பிடிப்பு நிறைவடந்ததையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது. 90 சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டது. படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்ததால் மீண்டும், உக்ரைனில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பையும் ’நட்பு’ பாடலையும் எடுக்க இருண்டு வாரங்களுக்கு முன்பு படக்குழு உக்ரைன் சென்றது.
இந்த நிலையில், இன்று உக்ரைன் படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது. அதனையொட்டி, ராஜமெளலியும் படக்குழுவினரும் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அடுத்தவாரம், மொத்தப்படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.