”90% நெகட்டிவ் ரிவ்யூஸ் வர காரணம் இதுதான்” - இயக்குநர் பிரேம் குமார் ஓபன் குற்றச்சாட்டு
தமிழ்சினிமாவில் சமீப காலமாக புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது, சமூக வலைதளங்களில் சொல்லப்படும் விமர்சனங்கள் வேண்டுமென்றே சொல்லப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அதிகமாகவே இருந்துவருகிறது.
கங்குவா திரைப்படத்தின்போது இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்து, முதல் 7 நாட்களுக்கு சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் திரைப்படங்களுக்கு ரிவ்யூஸ் சொல்லக்கூடாது என்றெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கு போடுவது வரை பிரச்னை சென்றது.
பல திரைப்படங்கள் நெகட்டிவ் ரிவ்யூஸ்க்கு தகுந்தாற்போல் மோசமான திரைப்படங்களாக இருந்தாலும், பெரும்பாலனவர்களால் கொண்டாடப்பட்ட ’மெய்யழகன்’ திரைப்படம் ரிலீஸான முதல் 7 நாட்களில் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. பலபேர் ஓடிடியில் மெய்யழகன் வெளியான பிறகு பார்த்துவிட்டு, இந்தப்படத்திற்கு எப்படி நெகட்டிவ் ரிவ்யூ கொடுத்தார்கள் என்ற கேள்வியை பதிவுகளாக பதிவிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் நெகட்டிவ் ரிவ்யூஸ் கொடுப்பது ஒரு நல்ல படத்தின் வசூலையும் எப்படி பாதிக்கிறது, எதனால் வேண்டுமென்றே நெகட்டிவ் ரிவ்யூஸ் சொல்லப்படுகிறது என்பது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் மெய்யழகன் படத்தின் இயக்குநர் பிரேம் குமார்.
90% பேர் வேண்டுமென்றே நெகட்டிவ் ரிவ்யூ சொல்கிறார்கள்..
சமீபத்தில் இந்தியன் ஸ்க்ரீன் ரைட்டர்ஸ் கான்பிரன்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மெய்யழகன் பட இயக்குநர் பிரேம் குமார், தமிழ்சினிமாவில் நெகட்டிவ் ரிவ்யூஸ் கொடுப்பது நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தெரிவித்தார்.
தயாரிப்பாளர்களிடம் பணம்பெறும் நோக்கத்துடன் 90% ரிவ்யூவர்ஸ் செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய பிரேம் குமார், “தமிழ் சினிமா எதிர்மறை விமர்சனங்களால் பெரிய பிரச்சனையை சந்தித்து வருகிறது. படங்களுக்கு நெகட்டிவ் ரிவ்யூஸ் கொடுப்பது நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. எல்லோரும் இல்லை, ஆனால் பல ரிவியூவர்ஸ் படத்தின் மதிப்பை குறைத்து முதல் வார வசூலை குறிவைக்கும் ஒரு திட்டத்துடன் செயல்படுகிறார்கள். 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பணம்பெற்றுக்கொண்டு விமர்சனம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.
படம் ரிலீஸான முதல் வாரத்தை டார்கெட் செய்து எதிர்மறையான விமர்சனங்கள் கொடுத்தால் வசூல் பாதிக்கப்படும், அப்போது அடுத்தபடத்திற்கு தயாரிப்பாளர்கள் அவர்களை தேடிவருவார்கள் என்ற நோக்கத்துடன் பலபேர் செயல்படுகிறார்கள். அதிகமாக நெகட்டிவ் ரிவியூஸ் வருவதற்கு காரணங்கள் இதுவாகவே இருக்கின்றன. சொல்லப்போனால் நேர்மையான விமர்சனங்கள் சொல்பவர்கள் கூட ஒரு படத்தை விமர்சனம் செய்யும் திறன் உள்ளவர்களாக இருப்பதில்லை" என்று குற்றச்சாட்டை வைத்துள்ளார்.