குறைந்தபட்சம் ஒரு எம்.எல்.ஏ : இயக்குனர் பேரரசு ஆசை!
2௦17-ஆம் வருடத்திற்கான ரைசிங் ஸ்டார் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாஸ்கர் மீடியா, ஆர்கேவி பிலிம் இன்ஸ்டிடியூட், இந்தியன் கிளாசிகல் ஆர்ட்ஸ் & கல்சுரல் ட்ரஸ்ட் இணைந்து இந்த விழாவை நடத்தின.
இந்த விழாவில், விருதுகளை இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமாரும் பேரரசும் வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருமதி கோ.கோமதி ஐ ஆர் எஸ் சாதனையாளர் விருதுகளை வழங்கினார்.
அறிமுக நடிகராக நந்தன் (பள்ளிப்பருவத்திலே), அறிமுக நடிகையாக அதிதி பாலன் (அருவி), சிறந்த வில்லனாக டேனியல் பாலாஜி (இப்படை வெல்லும்), சிறந்த இயக்குனராக அருண்பிரபு புருஷோத்தமன் (அருவி), சிறந்த கதாசிரியராக கோபி நயினார் (அறம்) சிறந்த அறிமுக இயக்குனராக ஜிப்ஸி ராஜ்குமார் (அய்யனார் வீதி), சிறந்த இசையமைப்பாளராக சாம் சி.எஸ் (விக்ரம் வேதா) உட்பட பலர் விருதுகள் பெற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பேரரசு, “2௦17ஆம் வருடத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியான படங்கள், பெரிய வெற்றிகளை குவித்துள்ளன. டைரக்ஷனை விட நடிப்பு பாதுகாப்பாக தோன்றுகிறது. கஷ்டப்பட்டு படம் இயக்கினாலும் மதிப்பு கிடைப்பதில்லை. இனி வரும் நாட்களில் நடிப்பில் கவனம் செலுத்தப்போகிறேன். அதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு எம்.எல்.ஏவாக ஆகிவிடவேண்டும்’ என்றார்.
ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, ’அடுத்ததாக படங்களை இயக்கவுள்ளேன். எனக்கு டைட்டில் பிரச்சனை இருக்காது. எஜமான்-2, சிங்காரவேலன்-2 என டைட்டில்களை வைத்து படம் எடுத்துவிடுவேன்’ என்றார்.