தெலுங்கில் தியேட்டர்களில் வெளியாகும் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’
செப்டம்பர் மாதம் தெலுங்கு மொழியில் வெளியாகிறது இயக்குநர் பா.ரஞ்சித்தின் ’மெட்ராஸ்’ திரைப்படம்.
இயக்குநர் பா.ரஞ்சித்தை இன்று தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக்கியது கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற சமயத்தில் வெளியானபோது தமிழகத்தில் கலவரமும் போராட்டங்களும் நடைப்பெற்றுக்கொண்டிருந்த சூழலிலும், வெளியான ‘மெட்ராஸ்’ அனைவரின் பாராட்டுக்களையும் குவித்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியது.
குறிப்பாக, இப்படம் பேசிய அரசியலும், வசனங்களும் கவனம் ஈர்த்தன. சமீபத்தில் பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ வெற்றி கொடுத்த உற்சாகத்தில் ‘மெட்ராஸ்’ படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெலுங்கில் வெளியிடவுள்ளது. இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வரும் செப்டம்பரில் தியேட்டர்களில் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இயக்குநர் பா.ரஞ்சித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.