”கம்யூனிஸ்ட்டுங்க லிங்க்ல உள்ளவன் சார்”: கவனம் ஈர்க்கும் ‘ரைட்டர்’ ட்ரெய்லர்
பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘ரைட்டர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் கோவிந்த் வசந்தா இசையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது ‘ரைட்டர்’. இதனையொட்டி நேற்று மாலை படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தொடங்கும்போதே கோவிந்த் வசந்தாவின் இசை ட்ரெய்லருக்குள் ரசிகர்களை இழுக்கிறது.
என் சர்வீஸ்லயே பேனா, டைப் ரைட்டர், இப்போ கம்ப்யூட்டர் இதுத்தவிர ஒரு வேலை செய்ததில்லை’... ‘சர்வீஸ்ல பாதி நாள் ரைட்டராவே இருந்துட்டேன்; ரொம்ப நாளாச்சு... கையெல்லாம் நடுங்குது சார்’ என ரைட்டர் தங்கராஜாக நடித்துள்ள சமுத்திரக்கனி பேசும் வசனம் காவலராக இருந்தாலும் காலம் மாறினாலும் காலம்முழுக்க எழுதிக்கொண்டே இருக்கும் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக பதிவு செய்வதோடு காவல்துறை உயரதிகாரிகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது.
‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’... ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை’ போன்ற வசனங்கள் தற்கால நிகழ்வுகளை நினைவூட்டுகின்றன. ‘சார் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்களோட பெரிய லிங்க்குல உள்ளவன் சார்’ என்ற வசனத்துடன் ’ரைட்டர்’ சிவப்பு நிற டைட்டில் கார்டுடன் குறியீடாய் நிறைவடைந்து கவனம் ஈர்க்கிறது.