இயக்குநர் மகேந்திரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யதார்த்த சினிமாவின் இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன் 1978-ம் ஆண்டு வெளிவந்த ‘முள்ளும் மலரும்’ படம் மூலம் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், இயக்குநர் பாலு மகேந்திராவிற்கு மிகவும் பிடித்த இயக்குநர் என பெயர் பெற்றவர் மகேந்திரன்.
கடந்த சில ஆண்டுகளாக தெறி, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த மகேந்திரன் நேற்று மதியம் 12 மணியளவில் உடல்நலக் குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள அவர் தீவிர சிகிச்சை பிரிவில் முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு டையாலிசிஸ் செய்யப்பட்டதாகவும், மேலும் ஒரு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை காண நெருக்கமான நண்பர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.