எங்களை ஆயுதம் எடுக்க வைத்து விடாதீர்கள்: பாரதிராஜா பரபர
வைரமுத்து விவகாரத்தில், எங்களை ஆயுதம் எடுக்க வைத்து விடாதீர்கள், குற்றப்பரம்பரை ஆக்கிவிடாதீர்கள் என்று பாரதிராஜா கூறியுள்ளார்.
இயக்குநர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் ’கடவுள்2’ படத்தின் தூவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, ஆண்டாள் சர்ச்சை விவகாரத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “வைரமுத்து வருத்தம் தெரிவித்தப் பின்னரும் போராட்டங்கள் தொடர்வது ஏன்?. எங்களுக்கு மதம் கிடையாது. வைரமுத்துவை காரணம் காட்டி கொல்லைப்புறமாக வர நினைப்பவர்களின் ஆசை நிறைவேறாது.
வைரமுத்து தனி மனிதன் அல்ல; தமிழுக்கும், இலக்கியத்திற்கு மாபெரும் தொண்டாற்றியவன். நியாயமாக சினிமாதுறையில் இருந்துதான் குரல் வந்திருக்க வேண்டும். எங்களை ஆயுதம் எடுக்க வைத்து விடாதீர்கள், குற்றப்பரம்பரை ஆக்கிவிடாதீர்கள்” என்றார்.
வெளி மாநிலத்தவர் அரசியலுக்கு வருவது குறித்து பேசிய பாரதிராஜா, “தமிழகத்தில் தலைமை இல்லை என்று யார் சொன்னது. கோடானக் கோடி தலைவர்கள் இருக்கிறார்கள். இதுநாள் வரை நாங்கள் பொறுமை காத்தோம். தலைமையேற்க வெளியில் இருந்து வருபவர்களுக்கு உரிமை கிடையாது” என்றார்.

