அழுக்கு ஆடை கதை.. கமல் அலுவலகத்தில் நுழைந்த பாரதிராஜா.. ’16 வயதினிலே’ நினைவலைகள்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். இதைத் தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு முதல்வர் விஜய், அமைச்சர்கள், பிறகட்சித் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக சென்னையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது. தேனி, வத்தலகுண்டு அருகே காட்ரோடு பகுதியில் உள்ள தோட்டத்தில் அவரது உடல், நாளை பிற்பகல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்காக அந்தப் பண்ணை தோப்பில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பிலும் மாவட்ட காவல்துறை சார்பிலும் முன்னேற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, அவருடைய நினைவலைகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அவருடைய ‘16 வயதினிலே’ படம் குறித்த செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி, ’16 வயதினிலே’ படத்துக்காக நடிகர் கமல்ஹாசனை அணுகியுள்ளார்.
அவரைச் சந்திப்பதற்காக அவரது அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அதுகுறித்து 2017இல் பேட்டியளித்த நடிகர் கமல், "அவருடைய அழுக்கு ஆடைகளின் அடிப்படையில் நான் அந்த வாய்ப்பை மறுத்திருந்தால், இன்று உங்களுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டேன். கதையைக் கேட்ட பிறகுதான், அவர் ஒரு மாபெரும் மேதை என்பதை நான் உணர்ந்தேன்" என்றார். இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனையே மொத்தமாக மாற்றியிருப்பார் பாரதிராஜா.. வெற்றிலை பாக்கு வாய், காலை இழுத்து நடக்கும் நடை, வெட்டாத தலைமுடி, அழுக்கு வேட்டி.. என அவரது சப்பானி கதாபாத்திரம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. ஒருகட்டத்தில் இந்தப் படத்தில் அவரை கோவணத்துடனும் நிற்க வைத்திருப்பார். அப்படியான உழைப்பில் வெளிவந்த அந்தப் படம் வெள்ளிவிழா கண்டது. பல விருதுகளையும் வென்றது.

