தியேட்டர்களை திறக்க இயக்குநர் பாரதிராஜா தமிழக அரசுக்கு கோரிக்கை
கொரோனாவால் மூடப்பட்டுள்ள திரையரங்குகளை திறக்க தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்தியா முழுக்க கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாடு முழுக்க பொதுமுடக்கம் என்பதால் சினிமா ஷூட்டிங்குகள் நடத்தவும் மற்றும் தியேட்டர்கள் திறக்கவும் தடைப் போடப்பட்டது. ஐந்து மாதங்களுகும் மேலாக தியேட்டர்கள் திறக்காததால் ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாயின. அப்படித்தான், நடிகை ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம், நடிகை கீர்த்தி சுரேஷின் ’பென்குயின்’ போன்ற படங்கள் வெளியாகின.
தமிழைப்போலவே மலையாளம், இந்திப் படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இன்றுக்கூட ஓணம் பண்டிகையையொட்டி மல்லுவுட்டில் துல்கர் சல்மான் தயாரித்த படம் ஓடிடியில் வெளியாகிறது. சிறிய பட்ஜெட் படங்கள் வந்துகொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் அக்டோபர் 30 ஆம் தேதி நடிகர் சூர்யாவின் ’சூரரைப் போற்று’ படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், பாரதி ராஜா, “எங்கள் திரையுலகம் இருண்டுவிட்டதோ திரும்ப தழைக்க அடுத்த ஆண்டு ஆகுமோ என்று எண்ணியிருந்த வேளையில், சின்னத்திரை ஷூட்டிங் பாதுகாப்புடன் நடப்பதைப் போல நாங்களும் நடத்துவோம் என்று கோரிக்கை வைத்ததால், கோரிக்கையை ஏற்று சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதியளித்தை நன்றியோடு பார்க்கிறோம். அதற்காக தமிழக அரசுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் நன்றிகள் பல.
இதேபோல சில வரைமுறைகளோடு தியேட்டர்களையும் திறக்க அனுமதி அளிப்பீர்களென்று நம்புகிறோம். திரைப்பட ஷூட்டிங் ஆரம்பித்தாலும் நாங்கள் உண்மையாக மீளும் நாள் தியேட்டர்கள் திறக்கும் அன்றுதான். அதன்மூலமே எங்கள் தயாரிப்பாளர்கள் முடங்கிய பணத்தை எடுக்க முடியும். அதனால், விதிமுறைகளோடு திறந்து விடுங்கள்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.