மனிதகுலத்துக்கு எதிரான தடை: ட்ரம்பின் தடை உத்தரவை விமர்சித்த ஆஸ்கர் இயக்குனர்
அமெரிக்காவுக்குள் வெளிநாட்டவர் வர விதிக்கப்பட்டிருக்கும் தடை மனிதகுலத்துக்கு எதிரானது என்று ஆஸ்கர் விருதினை வென்ற தி சேல்ஸ் மேன் படத்தின் இயக்குனர் அஸ்கர் ஃபர்கார்டி விமர்சித்துள்ளார்.
திரை உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்தது. இதில், சிறந்த வெளிநாட்டு மொழி படத்துக்கான விருதினை ஈரான் நாட்டைச் சேர்ந்த தி சேல்ஸ் மேன் திரைப்படம் வென்றது. அமெரிக்காவுக்குள் ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், விருது வழங்கும் விழாவில் அந்த படத்தின் இயக்குனர் அஸ்கர் ஃபர்கார்டியால் கலந்துகொள்ள இயலவில்லை. இதனால் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அவர் அனுப்பிய கடிதம் வாசிக்கப்பட்டது. அதில், அமெரிக்காவுக்குள் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை மனித குலத்துக்கு எதிரானது என்று அவர் விமர்சித்தார்.