கந்துவட்டி ஒட்டுமொத்த திரைத்துரையின் பிரச்னை: அமீர்
கந்துவட்டி என்பது ஒட்டுமொத்த திரைப்படத்துறையின் பிரச்னை என இயக்குநர் அமீர் தெரிவித்தார்.
கந்துவட்டி கொடுமை காரணமாக நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மருத்துவமனை வாயிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இயக்குநர் அமீர், “இந்த கொடுமை சசிக்குமார் மற்றும் அசோக்குமாருக்கு நடந்தது அல்ல. இது ஒட்டுமொத்த திரைப்படத்துறையின் பிரச்னை. ஒவ்வொரு திரைப்படமும் வெளியாவதற்கு முந்தைய நாள் யார் தடை செய்கிறார்கள்? என்பதை விசாரிக்க வேண்டும். ஒரு பைனான்சியரிடம் இருந்து பணம் வாங்கியதற்கு, விநியோகிஸ்தர்கள் எப்படி படத்தை நிறுத்தி வைக்க முடியும். பைனான்சியருக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் என்ன தொடர்பு? இவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டியது சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பொறுப்பு. இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் தக்க நடவடிக்கையை எடுக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.