சூர்யா - வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இணையும் அமீர்
சூர்யா - வெற்றிமாறனின் ’வாடிவாசல்’ படத்தில் இயக்குநர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறனும் நகைச்சுவை நடிகர் சூரியை ஹீரோவாக அறிமுகப்படுத்தி ’விடுதலை’ படத்தை இயக்கி முடித்துவிட்டு தற்போது, ‘வாடிவாசல்’ படத்திற்கான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆரம்பத்தில் தொடங்கவிருக்கிறது. ‘வாடிவாசல்’ படத்திற்குப் பட்ஜெட் 200 கோடி ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது. ஜல்லிக்கட்டு கதைக்களத்தைக் கொண்ட இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க தாணு தயாரிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தில் இயக்குநர் அமீர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் சூர்யாவின் மனைவியின் அண்ணனாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் அமீரின் பெயர் மருதன் என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, அமீர் வெற்றிமாறனின் ‘வடச்சென்னை’ படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் அழுத்தமாக நடித்து கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.