தனித்துவ நடிப்பால் முத்திரை பதித்த திலீப் குமாரின் வாழ்க்கை வரலாறு

தனித்துவ நடிப்பால் முத்திரை பதித்த திலீப் குமாரின் வாழ்க்கை வரலாறு
தனித்துவ நடிப்பால் முத்திரை பதித்த  திலீப் குமாரின் வாழ்க்கை வரலாறு

இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகர் திலீப் குமார் உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். இந்திய திரையுலகில் முன்னணி இடத்தில் இருக்கும் பாலிவுட் சினிமாவில் தனித்துவ நடிப்பால் முத்திரை பதித்தவர் திலீப் குமார்.

1922-ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் முகமது யூசுப் கான். தன்னுடைய 22-வது வயதில் திரைத் துறையில் நுழைந்தார். பாம்பே டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் 1944-ஆம் ஆண்டு வெளியான Jwar Bhatt படத்தில் இடம்பெற்ற இவரின் கதாபாத்திரம் மக்களிடையே பிரபலம் அடைந்தது. இதன் மூலம் முகமது யூசுப்கான் திலீப்குமாராக மக்களிடம் பிரபலமடைந்தார். இதன் மூலம் 65 திரைப்படங்களில் தன்னுடைய அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி அடைந்தார்.

திலீப்குமார் நடிப்பில் வெளியான Andaz, Aan, Daag, Azaad, Ram Aur Shyam ஆகிய படங்கள் அவரின் பல்வகை நடிப்பை வெளிப்படுத்தின. இதேபோல் 1955-ஆம் ஆண்டு வெளியான தேவதாஸ் திரைப்படம் திலீப்குமாருக்கு மிக முக்கிய படமாக அமைந்தது. அந்த காலகட்டத்திலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் தேவதாஸ் கொண்டாடப்பட்டது. அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த திலீப்குமார் 1976-க்கு பிறகு ஐந்து ஆண்டுகள் ஓய்வெடுத்துக் கொண்டார். அதன் பிறகு 1981-ஆம் ஆண்டு முதல் மீண்டும் அடுத்த தலைமுறை நடிகருடன் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.

இவர் இறுதியாக 1998-ஆம் ஆண்டு வெளியான Qila படத்தில் நடித்தார். இதன் பின் வயது மூப்பின் காரணமாக ஓய்வு எடுத்துக்கொண்டார். பாலிவுட்டில் இன்று அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் என பல கான் நடிகர்கள் கோலோச்சினாலும், அந்தத் துறையின் முதல் கான் நடிகர் முகமது யூசப் கான் ஆன திலீப் குமார்தான். இந்திய அரசின் தாதா சாகேப் பால்கே, பத்ம விபூஷண் ஆகிய உயரிய கெளரவங்களைப் பெற்றவர். 

அதேபோல் அதிக முறை ஃபிலிம்பேர் விருது வென்றவர் என்ற சாதனையும் திலீப்குமார் தன் வசப்படுத்தியுள்ளார். திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்களை கவர்ந்த திலீப்குமார் தன்னுடைய 98 வயதியில் இன்று காலமானார். இவரின் மறைவுக்கு இந்திய திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

- செந்தில்ராஜா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com