நடிகர் திலீப் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!
நடிகர் திலீப் வெளிநாட்டில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள கேரள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 85 நாள்கள் சிறையில் இருந்த நிலையில் அவர், பின்னர் ஜாமினில் வெளிவந்தார். அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்று கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அவர் ஒப்படைத்தார்.
இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துபாயில் நடக்கும் தனது உணவகத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தனது பாஸ்போர்ட்டை வழங்கி உதவுமாறு கேரள உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். அதை ஏற்ற கேரள உயர் நீதிமன்றம், திலீப் ஜாமினில் வெளிவந்தபோது ஒப்படைத்திருந்த அவரது பாஸ்போர்ட்டை ஏழு நாட்களுக்கு வழங்க கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி, அவரது பாஸ்போர்ட் அவரிடம் வழங்கப்பட்டது. பின்னர் அங்கு சென்று வந்ததும் பாஸ்போர்ட் மீண்டும் நீதிமன்றத் தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது நடிக்கும் புதிய படத்துக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தை நாடியிருந்தார் நடிகர் திலீப். டிசம்பர் 31 ஆம் தேதி வரை வெளிநாட்டு படப்பிடிப்பில் இருக்க வேண்டியுள்ளதால் பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து அவர் படப்பிடிப்புக்காக செல்லும் நாடுகள், தங்கும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை நீதிமன்றம் கேட்டிருந்தது. அவை திலீப் சார்பில் சமர்பிக்கப்பட்டதை அடுத்து வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி பாஸ்போர்ட் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.