“சென்னை எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்! ஏனெனில்...” - ‘LGM’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தோனி உருக்கம்!
இந்திய ரசிகர்களால் ‘கூல் கேப்டன்’ என்றும் சென்னை ரசிகர்களால் ‘தல’ என்றும் செல்லமாய் அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி. இவர், இந்திய அணிக்காக உலகக் கோப்பைகளை வென்று கொடுத்ததுடன், பல சாதனைகளையும் படைத்தவர். இவருடைய தலைமைப் பண்பு இன்றுவரை பலராலும் பேசப்பட்டு வருகிறது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
அதிலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கோப்பையை, சென்னை அணிக்காக 5வது முறையாகப் பெற்றுத் தந்தார். பின்னர் முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், கடந்த ஜூலை 7ஆம் தேதி தன்னுடைய 42வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதுகுறித்த வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங்கும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மென்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மூலம் தமிழில் ’LGM’ (Lets Get Married) என்ற திரைப்படத்தைத் தயாரித்து வருகின்றனர். ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருக்கும் இப்படத்தில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (ஜூலை 10) சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தோனி, அவரது மனைவி சாக்ஷி சிங் தோனி, ஹரிஷ் கல்யாண், யுவனா, யோகி பாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக, தோனி நேற்று இரவு தன் குடும்பத்தினருடன் சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் பேசிய தோனி, “என்னுடைய முதல் படம் தமிழ் படமாக அமைந்ததை விதியாகவே (destiny) கருதுகிறேன். சென்னை மக்கள் எப்போதோ என்னைத் தத்தெடுத்து விட்டனர். எனக்கு இங்கு கிடைக்கும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சென்னை எப்போதுமே எனக்கு ஒரு சிறப்பான நகரம்தான். முதல் டெஸ்ட் போட்டி சென்னையில்தான் விளையாடினேன். டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை எடுத்ததும் சென்னையில்தான்.
இப்படம் மிக வேகமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. ’படப்பிடிப்பு தளத்தில் உணவு முறையாக வழங்கப்பட வேண்டும்’ எனக் கூறியிருந்தேன். படப்பிடிப்பு நடைபெறும் நேரத்தில், நான் எந்த குறிக்கீடும் செய்யவில்லை. ’படம் எடுத்து முடித்தவுடன், ஒருமுறை எனக்குக் காட்டுங்கள்; அதில் எனக்கு என்ன பிடித்துள்ளது எனக் கூறுகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். தீபக் சாகரைப் பொறுத்தவரை, ’வேண்டாம்’ என நினைக்கும் ஒரு நண்பர்தான்.
வாழ்நாளில் நான் தீபக் சாகரை MATURE ஆகப் பார்க்கப் போவதில்லை. முதலில் பார்த்ததைவிட தற்போது MATURE ஆக உள்ளார்” எனப் பேசியிருந்தார்.
தோனி திரைப்பட நிறுவனத்தின் சார்பில் இன்று ’LGM’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இதே நாளில், அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியதையும் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். கடந்த 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டி இதே நாளில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தோனி, 50 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
அவருடைய விக்கெட் ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. காரணம், அவர் நின்றிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என ரசிகர்கள் நம்பியிருந்தனர். இறுதியில் இந்திய அணி, அந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதற்குப் பின் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த தோனி, கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.