‘உயிரணு’ தானத்தை பற்றி துணிச்சலாக பேசும் ‘தாராள பிரபு’- திரை விமர்சனம்...!

‘உயிரணு’ தானத்தை பற்றி துணிச்சலாக பேசும் ‘தாராள பிரபு’- திரை விமர்சனம்...!
‘உயிரணு’ தானத்தை பற்றி துணிச்சலாக பேசும் ‘தாராள பிரபு’- திரை விமர்சனம்...!

2012'ல் இந்தியில் வெளியான திரைப்படம் ‘விக்கி தி டோனர்’. விந்து தானம் பற்றி துணிச்சலாகவும் ஜாலியாகவும் பேசிய இப்படத்தை சூஜித் சிர்கார் இயக்கியிருந்தார். ஜூஹி சதுர்வேதி கதை எழுதியிருந்த அப்படம் தமிழில் "தாராள பிரபு" என்ற பெயரில் ரீமேக்காகி தற்போது வெளியாகியிருக்கிறது.

ஹரிஷ் கல்யாண், தான்யா ஹோப், சச்சு, விவேக் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இதனை இயக்கியிருக்கிறார். ஸ்கிரீன் ஸீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் செல்வகுமார் எஸ்.கே.

கால்பந்து விளையாடுவதில் ஆர்வமுள்ள ஹீரோவாக பிரபு என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நல்ல வேலை வாங்கி செட்டில் ஆகவேண்டும் என நினைக்கிறார். தன் அம்மாவும், பாட்டியும் தான் உலகம் என இருக்கும் பிரபுவின் உலகில் நுழைகிறார் ஹீரோயின் தான்யா ஹோப். குழந்தையின்மைக்கு சிகிச்சை தரும் மருத்துவமனையினை நடத்தி வரும் டாக்டர் கண்ணதாசனாக வருகிறார் பத்மஸ்ரீ விவேக். குழந்தை வேண்டி இவரிடம் வரும் தம்பதிகளுக்கு உதவ வீரியமான விந்தணு உள்ள ஒரு நபரை தேடுகிறார் கண்ணதாசன். அப்படியொரு நபராக கிடைக்கிறார் பிரபு. பிறகு தொடரும் கலகலப்பான காட்சிகளும் அழகான மெசேஜும் தான் தாராள பிரபு.

இயக்குநர் இப்படி ஒரு சப்ஜெட்டை எடுத்து பேச நினைத்ததற்கே அவரை பாராட்டியாக வேண்டும். படத்தின் முதல் பாதியில், துவக்கத்தில் கதையை எங்கிருந்து ஆரம்பிப்பது என ஒரு தடுமாற்றம் இயக்குநருக்கு இருந்திருக்கிறது. அதனாலேயே முதல் பாதியின் திரைக்கதை கொஞ்சம் ஸ்லோ. பிறகு விவேக், ஹரிஸ் கல்யாண், தான்யா ஹோப் என ஒவ்வொருவராக வந்து எல்லா கதாபாத்திரங்களும் கதைக்குள் இணையவும் தாராள பிரபு, கலகல வேகமெடுக்கிறார்.

இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் வாழ்க்கை முறை மாற்றத்தில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்னை குழந்தையின்மை. இரத்த தானம்போல விந்து தானத்தின் மூலமும் பெரும்பாலான குழந்தையின்மை பிரச்னையை தீர்க்க முடியும் என்றாலும் பண்பாட்டளவிலும், உளவியல் ரீதியாகவும் அறிவியலின் அந்த வழிகாட்டுதலுக்கு நாம் இன்னும் தயாராகவில்லை.

அறிவியல் கை கொடுக்கும் இந்த வசதியை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் இயக்குநர் சொல்லும் அழகான செய்தி., என்றாலும் படத்தில் எங்குமே விந்து என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. ஸ்பேர்ம் என்கிறார்கள். இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான் என்றாலும் ஆங்கிலத்தில் சொல்லும்போது நெருடாத ஒரு சொல் தமிழில் அசூயை உணர்வைத் தரும் என நினைத்திருப்பார்போல இயக்குநர். இது தவறு. இப்படி ஒரு கதையை தேர்வு செய்த பிறகு எல்லாவற்றுக்கும் தயாராகவே களமிறங்கியிருக்க வேண்டும். ஏதோ ஒரு மனத்தடையும், பயமும் இயக்குநருக்கு இருப்பது படம் முழுக்க தெரிகிறது. அதனால்தான் இன்னுமே சிறப்பாக நகைச்சுவையில் ஸ்கோர் செய்ய வாய்ப்பிருக்கும் இந்தக் கதையில் அதனை செய்யாமல் கோட்டை விட்டிருக்கிறார்.

காம்பேக்ட் ஒளிப்பதிவு என்பார்கள். கதைக்கும் காதாபாத்திரங்களுக்கும் வெளியே துளியும் நகராத நிறம் மற்றும் ஒளி அமைப்பை உருவாக்குவது. அதனை செல்வகுமார் எஸ்.கே நன்றாக செய்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் கொஞ்சம் சுமார் தான். தான் ஒரு மூத்த நடிகர் என்பதை ப்ரேம் பை ப்ரேம் நிரூபிக்கிறார் விவேக். பொறுப்பான நகைச்சுவை பாணியை இப்படத்தில் கையாண்டிருகிறார். அவருக்கு பாராட்டுகள். நாயகி தான்யா ஹோப் துவக்க காட்சியில் ஹரிஸுக்கு அந்நியமான நபராக ஒட்டியும் ஒட்டாமலும் தெரிகிறார் என்றாலும் திரைக்கதை ஓட்டத்தில் இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்கவுட் ஆகியிருக்கிறது. ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் காவ்யாவிற்காக காத்திருக்கும் தருணத்தில் காத்திருப்பின் பதற்றத்தை வெளிப்படுத்தும் தான்யா ஹோப்பின் நடிப்பு முதிர்ச்சி. வாழ்த்துகள் தான்யா ஹோப்.

படத்தின் திரைக்கதை வசனம் நடிப்பு என தேடி தேடி குறைகளைச் சொல்லலாம்தான் என்றாலும், இன்றைய சமகால தமிழ்ச்சூழலில் தமிழ் சினிமாவில் இப்படியான படங்களை மனதார வரவேற்க வேண்டியது அவசியம். அவ்வகையில் இரு கரங்களையும் இறுகபற்றி தாராள பிரபுவை வரவேற்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com