இப்பவும் அவ கூப்பிட்டா வந்துடுவன்| பிடிக்காத காதலிக்காக உயிர்விடும் காதலன்! ராஞ்சனா எனும் பொக்கிஷம்!
குந்தனை நம்ப வைக்க கண்ணீர் வழிய சோயா பேசிக் கொண்டிருப்பாள். இல்லாத காதல் இருப்பதாய் வரவழைத்துக் கொண்டு நடித்து அவனை நம்ப வைக்க முயற்சிப்பாள். இதுகூடவா புரியாதவனா குந்தன். நொடிப்பொழுதில் அது நடிப்பு என்பதை உணர்ந்து கொண்டிருப்பான். சோயா பேசி முடிக்கும் வரை காத்திருந்த குந்தன், அவள் போ என்று சொல்லும் அந்த நொடியில் வெடித்துப் பேசுவான். சோயா கண்ணீர் சொட்ட சொட்ட பேசியதை தாண்டி ஒரு சொட்டு கண்ணீர் வெளியே வராமல் உணர்ச்சி பொங்க குந்தன் பேசுவான். கண்கள் குளமாக முகமெல்லாம் உணர்ச்சிகள் மேலோங்க அவனுடைய பேச்சு இருக்கும்...
ராஞ்சனா படத்தின் இந்த காட்சியில் குந்தன் கதாபாத்திரத்தில் நடிப்பின் உச்சம் தொட்டிருப்பார் தனுஷ் எனும் மகா கலைஞன். 2013ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாலிவுட்டில் தன்னுடைய அறிமுக படத்திலேயே கலைஞனுக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லை என்பதை நிரூபித்திருப்பார் தனுஷ்.
துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்த தனுஷ் அடுத்த பத்தே வருடங்களில் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த படம் தான் ராஞ்சனா. காதல் கொண்டேன் படத்தில் இருந்தே தனுஷ் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை அசத்தி வந்திருக்கிறார். புதுப்பேட்டை, மயக்கமென்ன, பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பு ஆற்றலை மெருகேற்றிக் கொண்டே வந்திருப்பார். ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்ற தனுஷ் என்ற நடிகனை தான் பாலிவுட் நம்பிக்கையுடன் அழைத்திருந்தது.
'Raanjhanaa' - பிடிக்காத காதலிக்காக உயிர்துறக்கும் சிறுவயது காதலன்!
2013ஆம் ஆண்டு இதே நாளில் தான் ராஞ்சனா படம் வெளியானது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்தப் படம். தமிழில் ஒரு வாரம் கழித்து அம்பிகாவதி என்ற டைட்டிலில் வெளியானது. முதல் படம் தான்.. ஆனால் காசியின் மைந்தனாக வட மாநிலத்தில் தெருக்களில் சுற்றித் திரியும் ஏழை இளைஞனாய் அப்படியே தன்னை மாற்றிக் கொண்டிருப்பார் தனுஷ். உடன் நடித்த அனைவருமே பாலிவுட் கலைஞர்கள். சோனம் கபூர் அங்கு மிகவும் பரிட்சையமான நடிகை. ஆனால் தென்னாட்டில் இருந்து கிளம்பிய தனுஷ் எனும் புயல் அங்கே அவர்கள் எல்லோரையும் தாண்டி பாலிவுட் ரசிகர்களிடம் அவரை ஒன்ற வைத்தது.
தமிழ் சினிமாவில் தனுஷை வெற்றி பெற வைத்ததே, நம்முடைய பக்கத்துவீட்டு பையன் போல இருக்கிறார் என்பதுதான். திருடா திருடி படத்தில் இருந்தே தமிழ் மக்களின் இல்லங்களில் குடிபுகுந்தவர் தனுஷ். அதேபோன்றுதான் ராஞ்சனா படமும் தனுஷ் இயல்பாகவே அவர்களுடன் ஒன்ற வைத்தது. இதற்கு அந்தப் படத்தில் வரும் காட்சியை வைத்து கூட சொல்லலாம்.
ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கும், மக்கள் தங்கள் நிலங்களை விட்டுக் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் அதிகாரியை சிறைப்பிடித்து வைத்திருப்பார்கள். அப்பொழுது இளைஞர்களின் கட்சி சார்பில் மக்களிடன் பேச தான் போவதாக குந்தன் சொல்வான். எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம். இவன் எப்படி மக்களிடம் பேசுவான் என்று. அவன் பேசினான், மக்கள் நம்பினார்கள். போலீசை உடன் அனுப்பினார்கள். அந்தக்காட்சி மறைமுகமாக சொல்வது இதுதான். தலைவனாக உருவெடுத்த குந்தனை தங்களில் ஒருவனாக அந்த மக்கள் பார்த்தார்கள். குந்தன் சொன்னான் மக்கள் ஏற்றார்கள். இதேதான்.. படம் முழுக்கவே தனுஷ் அப்படியே தான் வாழ்ந்தார். தங்கள் வீட்டி பையன் என பாலிவுட் ரசிகர்களை நம்ப வைத்தார்.
தனுஷ் எனும் ஆகச்சிறந்த கலைஞன்..
ராஞ்சனா படத்தின் முதல் பாதி முழுக்க கொண்டாட்டம். இரண்டாவது பாதி முழுக்க உணர்வு போராட்டம், அரசியல் போராட்டம். இரண்டிலும் தனுஷ் அப்படியே பொருந்திப்போய் இருப்பார். படம் முழுக்க தனுஷின் குரல் பின்னணியில் கதை சொல்லிக் கொண்டே இருக்கும். அது தமிழ் ரசிகர்களுக்கு படத்தை இன்னும் நெருக்கமாய் கொண்டு சேர்த்தது. க்ளைமேக்ஸ் காட்சியில் தனுஷ் குரலில் ஒலிக்கும் அந்த வசனங்கள் நிச்சயம் ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரவழைக்கும்.
ராஞ்சனா எப்படி பார்த்தாலும் கமர்ஷியல்படம் தான். ஆனாலும் சீரியஸாக காட்சிகள் கூடுதலாகவே இருக்கும். எல்லாவற்றிற்கும் தன்னுடைய நடிப்பால் ஈடுகொடுத்திருப்பார் தனுஷ். ஒரு இளம் தலைவராக உருவெடுக்கும் போதும், காதலிக்காக தன் உயிரையே விலையாய் கொடுக்க துணியும் போதும் தனுஷ் தன்னுடைய நடிப்பால் மிளிர்ந்திருப்பார்.
பாலிவுட்டில் முதல் படத்திலேயே 100 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்தார் தனுஷ். இந்த வெற்றி அடுத்த படத்திலேயே அமிதாப் பச்சன் உடன் ஷமிதாப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தனுஷிற்கு. ஆனால் அந்தப்படம் சரியாக போகவில்லை. இருவருவே நடிப்பில் போட்டி போட்டு நடித்த போதும் படம் போகாததால் அடுத்த படம் உடனே தனுஷிற்கு கிடைக்காமல் போய்விட்டது. இல்லையென்றால் பால்வுட்டில் தனுஷ் நிச்சயம் ஒரு ரவுண்ட் வந்திருப்பார். பின்னர் தனுஷ் ஹாலிவுட் வரை சென்று நடித்ததெல்லாம் தனிக்கதை. 2021-ல் மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே படத்தில் பட்டையை கிளப்பி இருப்பார் தனுஷ். மீண்டும் பாலிவுட்டில் தேரே இஷ்க் மெயின் படத்தில் மூலம் வெற்றிக்கொடியை நாட்ட இருக்கிறார்.
நடிப்பை பொறுத்தவரை தனுஷ் அசுரன் படத்தில் தொட்டது உச்சம். நேற்று வெளியாகியுள்ள குபேரா படத்திலும் தனுஷின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்று வருகிறது