வெற்றிமாறனின் ‘விடுதலை’: இளையராஜா இசையில் பாடல் பாடியுள்ள தனுஷ்
வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
’அசுரன்’ பட வெற்றிக்குப் பிறகு, வெற்றிமாறன், பாவக்கதைகள் படத்தில் இடம்பெற்ற நான்கு பாகங்களில் ஒன்றான ‘ஓர் இரவு’ என்ற கதையை இயக்கி இருந்தார்.அதன்பிறகு, தற்போது ஜெயமோகனின் ’துணைவன்’ சிறுகதையை எடுத்து சூரியை வைத்து ’விடுதலை’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில், சூரியுடன் விஜய் சேதுபதியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இளையராஜா இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் படப்பிடிப்பை முடித்த கையோடு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டது படக்குழு. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, ”’விடுதலை’ படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவருக்கு, நான்கு மணிநேரம் இளையராஜா சார் சொல்லிக்கொடுத்து பாட வைத்தார் . தனுஷ் கொஞ்சம் கூட டயர்ட் ஆகல” கூறியுள்ளார்.