“சிம்பு நடிப்பதால்‘வடசென்னை’யில் நடிக்க மறுத்தேன்” - தனுஷ் ஓபன்டாக்
‘வடசென்னை’ படக்குழுவினரின் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு வெளிப்படையாக பல விஷயங்களை பேசினார். அப்போது அவர் ‘சிம்பு நடிக்க வேண்டிய கதையில் நான் நடித்துள்ளேன்’ என்றார். அந்தத் தகவல் விழாவில் கலந்து கொண்ட பலரை வியப்பில் ஆழ்த்தியது.
மேலும் அவர் தொடர்ந்து பேசிய போது, “வெற்றிமாறன் சொன்ன மாதிரி ‘வடசென்னை’ 2003 ல இருந்தே ஆரம்பிச்ச பயணம். பொல்லாதவனுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு நினைச்சப்பவே தோன்றின கதைதான் ‘வடசென்னை’. ஆனா அப்பவே வெற்றிமாறன் தெளிவா இருந்தார். இந்தக் கதையை இப்ப செய்கிற அளவுக்கு நமக்கு மார்க்கெட் இல்லை என்பதை உணர்ந்திருந்தார். ஆயிரம் பக்கம் உள்ள கதையை எப்படி ஒரு இடத்தில் கொண்டு வந்து சேர்ப்பது என்பது சிரமமான விஷயமாக இருந்தது. அதற்கு நான் இன்னும் தயாராகவில்லைனு சொன்னார்.
அதற்கப்புறம் தான் நாங்க ‘ஆடுகளம்’ பண்ணோம். அதற்கு பிறகு ‘வடசென்னை’ யோசித்தோம். அப்ப ‘ஒரு பிரேக் எடுக்கிட்டு நாம வேலை செய்யலாம்’னு வெற்றிமாறன் சொன்னார். திரும்ப ஒருநாள் போன் பண்ணி ‘வடசென்னையை சிம்புகூட சேர்ந்து பண்ண போறேன்’னு சொன்னார். ‘சூப்பர் சார்.. ரொம்ப நல்லா இருக்கும் பண்ணுங்க. ஆனா என்னை அந்தப் படத்துல பார்க்க முடியாது. பரவாயில்லை”னு சொன்னேன்.
கொஞ்ச நாள் கழித்து அமீர் நடித்திருக்கும் ‘குமாரு’ என்கிற கேரக்டரை என்ன பண்ண சொல்லி போன்ல கேட்டார். அந்த கேரக்டர் பலமான கேரக்டர். ஆகவே பண்ணுங்கனு சொன்னார். 40 நிமிடங்கள் மட்டுமே வர்ற கேரக்டர் அது. நான் சொன்னேன். ‘சார் எனக்கு பெருந்தன்மை இருக்கு..ஆனா அவ்வளவு பெருந்தன்மை எல்லாம் இல்லை’னு பதில் சொன்னேன். நானும் சாதாரண மனுஷன்தான். ஆகவே எனக்கு அதுல உடன்பாடு இல்ல சார்..தப்பா நினைச்சுக்காதீங்க’னு சொன்னேன்.
அதுக்கு பிறகு அதை மறந்துட்டோம். வேறவேற திசையில போயிட்டோம். மறுபடியும் சந்திச்சப்ப ஒருசில காரணங்களால் ‘வடசென்னை’ அவங்க ரெண்டு சேர்ந்து பண்ண முடியாமல் போனதா வெற்றிமாறன் சொன்னார். அப்ப நான் ‘சிம்பு பண்றதா இருந்தது..இப்ப அவர் பண்ணல. திரும்ப நான் நடித்தால் தப்பாகிடும்’னு மறுத்தேன். உடனே ‘சூதாடி’ பத்தி பேசினோம். மேலும் இரண்டு மூன்று புராஜெட் பத்தி பேசினோம். மீண்டும் அவர் நடுவுல ‘விசாரணை’ எடுக்க போய்விட்டார். அதற்கு பிறகு ‘வடசென்னை’ நமக்கே வந்துவிட்டது. வெட்கவே இல்லாம சொல்றேன். இது திரும்ப நம்மகிட்டயே வந்ததுல ரொம்ப சந்தோஷம்தான்.” என்றார் தனுஷ்.