’ஆளவந்தான்’ சாயலில் இருக்கிறதா ‘நானே வருவேன்’?! சைகோ கிரைம் த்ரில்லரில் மிரட்டும் டீசர்!

’ஆளவந்தான்’ சாயலில் இருக்கிறதா ‘நானே வருவேன்’?! சைகோ கிரைம் த்ரில்லரில் மிரட்டும் டீசர்!
’ஆளவந்தான்’ சாயலில் இருக்கிறதா ‘நானே வருவேன்’?! சைகோ கிரைம் த்ரில்லரில் மிரட்டும் டீசர்!

நடிகர் தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.  

தனுஷ் மற்றும் செல்வராகவன் சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளப் படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் - இயக்குநர் செல்வராகவன் கூட்டணி, ஏற்கெனவே 3 வெற்றிப் படங்களை தந்த நிலையில், 4-வது முறையாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக தகவல் வெளியானதால், ‘நானே வருவேன்’ படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறி வந்தது. இந்தப் படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், டீசர் இன்று வெளியாகியுள்ளது. மிரட்டலான இரண்டு வெவ்வேறு லுக்கில் குடும்பத்துடன் நடிகர் தனுஷ் காணப்படுகிறார். கிரைம் த்ரில்லராக இருப்பதுபோன்று டீசர் காணப்படுகிறது. அதற்கேற்றவாறு இசையும் அதிரடியாக உள்ளது. சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஒருபக்கம் திரையரங்குகளில் வெளியாகி  வரவேற்பு பெற்று வரும்நிலையில், தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சைகோ த்ரில்லர் கதை:

டீசர் பொறுத்தவரை நானே வருவேன் ஒரு வகையான சைகோ த்ரில்லர் வகையிலான படம் என்பதை காட்டுக்கிறது. தனுஷ் கதாபாத்திரமும், செல்வராகவன் கதாபாத்திரமும் அந்த தன்மையில் இருப்பதாகவே தெரிகிறது. இளம் தோற்றத்தில் இருந்து தனுஷ் கதாபாத்திரம் சற்றே வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக இருக்கிறது. 

ஆளவந்தான் கதையின் சாயல்:

நானே வருவேன் டீசரில் கமல் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் படத்தின் சாயல் இருப்பதாக தோன்றுகிறது. ஆளவந்தான் படத்தில் உடன்பிறப்புகளாக இரண்டு கமலில் ஒருவர் சைகோ கொலைக்காரனாக இருப்பார். சிறு வயதில் சித்தி கொடுமை தாங்க முடியாமல் எல்லா பெண்களையும் வெறுக்கும் ஒரு மனநிலை பிறழ்ந்த கதாபாத்திரமாக கமல்ஹாசன் மிரட்டி இருப்பார். அந்த கதையில் கமல்ஹாசனின் சிறுவயதில் இரண்டு கேரக்டர்கள் வருவார்கள். அதேபோல், நானே வருவன் டீசரிலும் சிறு வயது கதாபாத்திரம் வருகிறது. அந்த சிறுவன் கொலை செய்வது போலவே காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் யார் சைகோ கொலையாளி?. தனுஷ் கதாபாத்திரமா அல்லது செல்வராகவன் கதாபாத்திரமா என்பது கேள்விதான்.

ஒரே தனுஷ் ஆக இருக்கவே வாய்ப்பு:

டீசரில் தனுஷ் இரண்டு தோற்றங்களில் வருகிறார். ஒன்று இளமையான தோற்றம். மற்றொன்று சற்றே வயது முதிர்ந்த முடி நரைத்த கண்ணாடி அணிந்த கதாபாத்திரம். இரண்டு தனுஷ் கதாபாத்திரங்களும் இரண்டு இடங்களில் நேருக்கு நேராக சந்திப்பது போல் உள்ளது. ஒரு காட்சியில் ஒரு தனுஷ் இன்னொரு தனுஷின் கதாபாத்திரத்தின் கழுத்தை நெரிப்பது போல் உள்ளது. ஆனால், மற்ற காட்சிகளில் ஒரு தனுஷின் வயது முதிர்ந்த பின் வரும் அதே கதாபாத்திரம் போன்று நினைக்க தோன்றுகிறது. குறிப்பாக அந்த அறையில் ஒரு தனுஷ் கதவை திறந்து பார்க்கிறார். உள்ளே ஒரு தனுஷ் சிரித்துக் கொண்டு புகைப்பிடித்தவாறு நிற்கிறார். ஒரு வேளை இவையெல்லாம் தன்னுடைய இளமை காலத்தை அவர் நினைத்து பார்ப்பதாக இருக்கலாம். 

ஒருவேளை கதை இப்படி இருக்குமோ:

தனுஷ் மூன்றுவிதமான வயது பரிணாமங்களில் இருக்கலாம். சிறுவயதில் நடக்கும் சில சம்பவங்கள் அவரது வாழ்க்கையை பாதிக்கலாம். பின்னர் இளம் வயதில் நடக்கும் சம்பவங்கள். பின்னர் சற்றே வயது முதிர்ந்த பின்னர் பக்குவப்பட்ட வயதில் நடக்கும் சம்பவங்களாக இருக்கலாம். ஆனால், செல்வராகவன் எந்த இடத்தில் வருகிறார் என்பதுதான் சற்றே சிக்கல். அந்த நெகட்டிவ் கதாபாத்திரமாக செல்வராகவன் வர வாய்ப்பிருக்கிறது. எப்படியோ தனுஷ், செல்வராகவன் போட்டி போட்டு வில்லத்தனத்தில் அசத்தியிருக்க வாய்ப்புண்டு. நிச்சயம் மிரட்டலான ரொமான்ஸ் காட்சிகளும் இடம்பெறும் என்றே தெரிகிறது.

மலைப்பிரதேசத்தின் கொள்ளை அழகு:

படம் ஊட்டி போன்ற மலைப் பிரதேசத்தில் நடப்பது போன்று உள்ளது. மரங்கள் அடர்ந்த குளிர்பாங்கான இடங்களில் காட்சிகள் நடப்பது போல் உள்ளது. அந்த படகு சவாரி காட்சிகள், தனுஷ் வரும் மரத்திலான வீடு போன்றவை அதற்கு சான்றுகள். ஒளிப்பதிவாளர் மிகவும் அசத்தலான அந்த லேண்ட் கேப்பை காட்சிப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. அதனால், படம் நிச்சயம் விஷூவல் ட்ரீட் ஆக அமைய வாய்ப்பிருக்கிறது.

ஹீரோ Vs வில்லத்தனமாக சகோதரன் 

ஒரு வேளை தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இருவரும் இரண்டு விதமான கேரக்டரில் இருந்தால் அதற்கு முன்னுதாரணங்கள் இருக்கிறது. வாலி படத்தில் இரட்டை பிறவிகளாக அஜித் நடித்திருப்பார். ஒரு கதாபாத்திரத்தில் காதல் ததும்பவும், இன்னொரு கதாபாத்திரத்தில் வில்லத்தனத்திலும் மிரட்டி இருப்பார். சூர்யா நடித்த 24 படத்திலும் ஒரு சூர்யா கதாபாத்திரம் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com