“எந்த பட்டமும் வேண்டாம்; அன்பு போதும்”- தனுஷ் ஓபன் டாக்..!
தனக்கு எந்த பட்டமும் வேண்டாம் என்றும் உங்களின் அன்பு மட்டும் போதும் என ரசிகர்கள் மத்தியில் நடிகர் தனுஷ் தெரிவித்தார்.
நடிகரும், ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நேற்று இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தனுஷின் பெற்றோர்களான கஸ்தூரி ராஜா அவரது மனைவி மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனுஷ் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
காலையிலேயே தனுஷ் வருவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். மதியம் வரை வராததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் தனுஷ் மாலையில் வருகிறார் என்ற செய்தி வந்தவுடன் ரத்த தானம் செய்து விட்டு சோர்வில் இருந்த ரசிகர்கள் புதுதெம்பு அடைந்தனர். தனுஷ் வந்தவுடன் மிகுந்த ஆர்ப்பரிப்புடன் அவரை வரவேற்றனர்.
பின்னர் நடிகர் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது:- “ கண்ணா எனக்கு எந்த பட்டமும் வேண்டாம்; உங்க அன்பு மட்டும் போதும். அன்பு மட்டும் கொடுங்க. . எந்த நடிகர்கள் பற்றியும் நாம் பேச வேண்டாம். அவர்களை பற்றியும், அவர்களது குடும்பத்தை பற்றியும் பேச வேண்டாம். அப்படியே யாராவது என்னை குறித்து உங்களிடம் தவறாக பேசினால் நன்றி என்று சொல்லிவிட்டு கடந்து போங்கள். அன்பு மட்டுமே நிரந்தரம்” என்றார். மேலும் விரைவில் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கப்படும் என்றார்.