செம்மரக்கடத்தல் கும்பலை பிடிக்க நடக்கும் ஆப்ரேஷனே OM!(2.5 / 5)
ஆந்திராவில் செம்மரக்கடத்தலில் ஈடுபடும் நபர் கார்த்திகேயன் (மம்மூட்டி). இவரை பிடிக்க ஆந்திர அரசு நியமித்த குழுவை வழி நடத்துகிறார் நித்யா ரெட்டி (சாய் பல்லவி). கார்த்திகேயனுக்கு மேல் உள்ள நபர்களையும், அவர்களின் தலைவன் அப்துல் ஹமீதையும் (நஸ்ருதீன் ஷா) பிடிப்பது அவரது திட்டம். அதே சமயம் கார்த்திகேயன் குழுவில் புதிதாக இணைகிறார் திருக்குமரன் (தனுஷ்). போலீஸ் கண்காணிப்பை மீறி செம்மரங்கள் கடத்த உதவியும் செய்து நம்பிக்கைக்குரியவர் ஆகிறார். இன்னும் ஒரே ஒரு கடத்தலை முடித்து, இந்த தொழிலில் இருந்து விலக நினைக்கிறார் கார்த்திகேயன். இதற்கு பிறகு என்ன ஆகிறது? போலீஸை மீறி கடத்தல் நடந்ததா? அல்லது போலீஸிடம் கடத்தல் குழு சிக்கியதா என்பதை எல்லாம் சொல்கிறது படத்தின் மீதிக்கதை.
செம்மரக்கடத்தல் பின்னணியில் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ஒரு த்ரில்லர் படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. அதிலும் பாதிப்புக்குள்ளாகும் கூலித் தொழிலாளர்கள் நிலையை ஒரு மெய்ன் ஸ்ட்ரீம் சினிமாவில் பேசி இருப்பது பாராட்டுக்குரியது.
தனுஷ் வழக்கம் போல அழுத்தமான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். புதிதாக குழுவில் இணையும் போது துடுக்குத்தனமாக பேசுவது, மனைவியை சமாளிக்க முடியாமல் திணறுவது, அப்பாவை நினைத்து கலங்குவது என பல இடங்களில் விதவிதமான உணர்வுகளை அழகாக கடத்துகிறார். கார்த்திகேயனாக மம்மூட்டி, நடிப்பில் குறை எதுவும் வைக்கவில்லை. சிறையில் இருக்கும் ஒரு காட்சியில் அத்தனை சிறப்பாக நடித்திருந்தார். சாய் பல்லவி தான் இந்தப் படத்தின் ஹைலைட். தெலுங்கு பேசும் காவலதிகாரியாக கச்சிதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். எந்த அலட்டலும் இல்லாமல் ஒரு இயல்பான போலீஸ் போல தான் படம் முழுக்க தெரிகிறார். ஸ்ரீலீலாவுக்கு பிரதான பாத்திரம் இல்லை என்றாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக முடிக்கிறார். இவர்கள் சிறப்பு தோற்றத்தில் வரும் Naseeruddin Shah, சின்ன சின்ன பாத்திரங்களில் வரும் லல்லு, இந்திரன்ஸ், ரேணு தேசாய், TSK ஆகியோரும் சிறப்பு.
தொழில்நுட்ப ரீதியாக எழிலரசு ஒளிப்பதிவு பெரிய பலம். நகரம், மலை பிரதேசம், இரவு என களமாகவும், காலமாகவும் பலவாறு பயணிக்கிறது. யானிக் பென் மற்றும் கேச்சா இருவரின் சண்டைப்பயிற்சி பல காட்சிகளை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறது. சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் எப்போதும் போல எனர்ஜி ஏற்றுகிறது. ஆனால் பின்னணி இசை அவ்வளவாக கவரவில்லை.
இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், படத்தின் நீளம் மற்றும் சுவாரஸ்யமாக நகராத திரைக்கதை. இந்தக் கதையில் என்ன எல்லாம் நடக்க இருக்கிறது என்பது எளிதில் யூகிக்க கூடியதாகவே இருக்கிறது. அதனால் பார்வையாளர்களுக்கு புதிதாக எந்த சுவாரஸ்யமும் இல்லை. கூலித் தொழிலாளர் தரப்பு பாதிப்பையும் சொல்ல வேண்டும், அதே சமயம் காவல்துறையின் நேர்மையையும் காட்ட வேண்டும் என்ற நிலைப்பாடு படத்துக்கு பாதகமாக அமைந்திருக்கிறது. மேலும் மம்மூட்டி பாத்திரம், புதிதாக வரும் தனுஷ் பாத்திரத்தை ஏன் கண்மூடித்தனமாக நம்புகிறது என்பதற்கும் அழுத்தமான காரணமும் இல்லை.
மொத்தமாக பார்த்தால், படத்தில் இன்னும் புதுமையான மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை சேர்த்திருந்தால் சிறப்பான த்ரில்லராக அமைந்திருக்கும்.
