‘தி கிரே மேன்’ படத்தில் தனுஷின் கேரக்டர் இதுதான்'- ரகசியத்தை உடைத்த ரூசோ பிரதர்ஸ்
‘தி கிரே மேன்’ படத்தில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் குறித்து அப்படத்தின் இயக்குநர்கள் தெரிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் நடிப்பில், தற்போது உருவாகியுள்ள ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’ படத்தை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் ஹாலிவுட் படம் தான் ‘தி கிரே மேன்’.
இந்தப் படத்தில் தனுஷுடன், ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். சுமார் 1500 கோடி ரூபாய் பொருட்செலவில் நெட்ஃபிளிக்ஸ் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்தப் படம் குறிப்பிட்ட சில திரையரங்குகளில், ஜூலை 15-ம் தேதியும், ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் நேரடியாகவும் வெளியாக உள்ளது. நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் ஜேக்கப் தி ஹன்டர் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் இந்தப் படத்தின் இயக்குநர்களான ரூசோ பிரதர்ஸ் கலந்துரையாடினர். அதில், நடிகர் தனுஷ் கதாபாத்திரம் குறித்து முக்கிய தகவல் அளித்துள்ளதால், தனுஷின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ரூசோ பிரதர்ஸ் தெரிவித்துள்ளதாவது, “உலகின் தலைசிறந்த கொலையாளிகளில் ஒருவராக தனுஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். படத்தில் ரையனின் கதாபாத்திரத்திற்குப் பிறகு, தனுஷின் கதாபாத்திரம் தான் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு இரண்டு அபாரமான சண்டைக் காட்சிகள் உள்ளன. நானும், ஆண்டனியும் தனுஷின் ரசிகர்கள். இந்த கதாபாத்திரத்தை அவரை மனதில் வைத்து அவருக்காகவே எழுதினோம். அவர் மிகவும் கெட்டவனாக இந்தப் படத்தில் நடித்துள்ளதுடன், ஹீரோவை எதிர்த்துப் போராடி கதையின் போக்கை சிக்கலாக்குவார். இந்தப் படத்தில் அவருக்கு வேடிக்கையான கதாபாத்திரம்.
தனித்துவமான நடிப்பைக் கொடுக்கும் தனுஷ், கேமரா முன்பு அபாரமாக நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம் கிட்டத்தட்ட ஒரு வகையில் மாயமான கதாபாத்திரம். இந்தப் படம் பார்வையாளர்களுக்குப் பிடித்திருந்தால், கதை சொல்லலை இங்கிருந்து மேலும் விரிவுப்படுத்துவோம். அதாவது விரைவில் அவரது கதாபாத்திரத்தை லீட் ரோலாக கொண்ட புதியப் படத்தை எதிர்பார்க்கலாம்” இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘The Extraordinary Journey of the Fakir’ படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ், ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படம் ஜூலை 1-ம் தேதி வெளியாக உள்ளது.