அபத்தமான கருத்தை விதைக்கும் இட்லி கடை
அபத்தமான கருத்தை விதைக்கும் இட்லி கடைweb

‘இட்லி கடை’ ஏன் ஆபத்தானது? குலத்தொழில், பழசுக்கு திரும்புறது.. என்ன தனுஷ் இதெல்லாம்..??

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த திரைப்படம் 'இட்லி கடை'.. இப்படம் எந்தளவு வரவேற்பு பெற்றதோ அதே அளவு 'தந்தையின் தொழிலைதான் மகனும் செய்யவேண்டும்' என்ற கருத்தை விதைப்பதாக விமர்சனங்களையும் பெற்றது.
Published on
Summary

முருகன் தனது தந்தை சிவனேசனின் இட்லிக்கடையை நடத்த முயற்சிக்கிறார், ஆனால் அவரது தந்தையின் கைப்பக்குவத்தை அடைய முடியாமல் தோல்வி அடைகிறார். பின்னர் எல்லாம் உன் ரத்தத்தில்தான் இருக்கிறது என்ற கருத்தை விதைத்து, பிறப்பின் அடிப்படையில் தொழிலைத் தேர்வு செய்வதை நியாப்படுத்துவது போலான வகையில் திரைக்கதை அமைந்துள்ளது..

இட்லி கடை.. தனுஷ் இயக்கத்தில் ஒரு ஃபீல் குட் திரைப்படம் என்ற எதிர்பார்ப்புதான் எல்லோருக்கும் இருந்தது. ஆனால், அப்படத்தின் கருப்பொருள் திரையரங்கில் வெளியானபோது இருந்ததை விட, ஓடிடியில் வெளிவந்தபின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இட்லிகடையில் என்ன சிக்கல்?

ரத்தத்தில் இருந்து வருகிறதா?

தந்தை சிவனேசன் இறந்த பிறகு அவர் விட்டுச் சென்ற இட்லிக்கடையை தானே நடத்துவது என்று முடிவெடுக்கிறார் முருகன் (தனுஷ்). காலையில் எழுந்து மாவாட்டுகிறார், இட்லி சுடுகிறார், சாம்பார் வைக்கிறார்.. ஆனால் கடைக்கு வந்து சாப்பிட்டவர்களோ அவர் தந்தை சிவனேசனின் கைப்பக்குவம் இல்லை என்று ஒதுக்குகிறார்கள். மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறார் முருகன். ஆனால், சிவனேசனின் ருசியை அவரால் பிடிக்க முடியவில்லை. மனம் உடைந்து போகிறார். அப்பொழுது கருப்பசாமி கோயிலில் சென்று முறையிடுகிறார். அங்கு அவரது தந்தை சிவனேசன் அவரிடம் பேசுவது போல் வருகிறது. அங்குதான் முக்கியமான ஒரு வாசகம் வருகிறது. ”பக்குவம் எங்கும் போகவில்லை உன்னிடம் தான் இருக்கிறது” என்று தன் தாயிடம் இருந்து அவர் கற்றதையெல்லாம் மகனுக்கு நினைவூட்டுகிறார். சுருக்கமாக, “உன் ரத்தத்தில் தான் இருக்கிறது..” என்கிறார். இதுதான் மிக மோசமான ஒரு கருத்து. பிறப்பின் அடிப்படையிலான கருத்தை வலியுறுத்தும் பிற்போக்குத்தனம்.

Idli Kadai
Idli KadaiIdli Kadai

சிவனேசன் எப்படி சிறுவயதிலிருந்து தன் தாயிடம் கற்றுக் கொண்டாரோ அதேபோல்தான் முருகனும் சிறு வயதில் இருந்து தன் தந்தையுடன் இருந்து அதனை கவனித்து வருகிறார். ஒரு காட்சியில் தன் பிள்ளைகளுக்கும் அதைக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்றுவேறு சொல்கிறார்.

எந்தவொரு விஷயமும் கவனித்து, உள்வாங்கி, செய்துபழகி வருவதுதான். இதைத்தான் வள்ளுவர் ”தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்று கூறியிருக்கிறார். முயற்சி செய்தால் ஒன்றை கற்றுக் கொள்ள முடியும் என்பதைத்தான் அறிவு வலியுறுத்தும். ரத்தத்தில் இருக்கிறது.. பிறப்பில் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் கருத்துகள்.

Idly Kadai
Idly KadaiDhanush

பிறப்பை வைத்து பேசுவது என்பது ஒருவகையில் குலத்தொழிலுக்கு வித்திடும். பிடித்திருந்து செய்வது என்பது தனி. ஆனால், தந்தையின் தொழிலை மகன் செய்தே ஆக வேண்டும் என்பது அவசியமில்லை. அடுத்த தலைமுறைக்கு, அந்த காலச்சூழலுக்கு ஏற்ப அவர்களுக்கு, என்ன சிறப்பாக வருகிறதோ அதனை அவர்கள் மேற்கொள்ளட்டும். அந்தத் தொழிலில் இருக்கும் பணிச்சுமையும் நெருக்கடியும் அது வேறுபிரச்சனை.

அபத்தமான கருத்தை விதைக்கும் இட்லி கடை
"ப்ளேடை வைத்து என் கையை கிழித்து..." - அஜித் பகிர்ந்த திகில் சம்பவம் | Ajith

ஏன் நகரத்தை நோக்கி படையெடுக்கிறார்கள்?

”இட்லிக்கடை படத்தில் வெளியூர் அல்லது வெளிநாடு வேலைக்கு செல்வது தேவையற்றது; சொந்த ஊரிலேயே இருக்கலாம்... பணத்திற்காக சொந்தபந்தங்களைவிட்டு இருக்க வேண்டாம்” என்பதை வலியுறுத்தும் வகையில் பல காட்சிகளும் வசனங்களும் இருக்கின்றன. குறிப்பாக, இளவரசு கதாபாத்திரம் வீடு திரும்பும் காட்சி முக்கியமானது. பல வருடங்களுக்கு பின்பு வீட்டிற்கு வரும் அவரை அவரது மனைவி ஆரத்தழுவி வரவேற்பார். தன் பிள்ளைகளை விசாரித்துவிட்டு தன் தாயிடம் செல்வார் இளவரசு. ”மகன் ராமராஜன் வந்திருக்கிறேன்” என்று அவர் சொல்ல அவரது தாய்க்கு நினைவு இருக்காது. எந்த ராமராஜன் என்று கேட்பார். தன் தாய்க்கே தன்னைப்பற்றி நினைவு இல்லாமல் போய்விட்டதால் தான் இனிமேல் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல மாட்டேன் என்ற முடிவை எடுப்பார்.

மேலும், ராஜ்கிரண் கதாபாத்திரம் தொடர்ச்சியாக முருகன் ஆக வரும் தனுஷிடம் கிராம வாழ்க்கையின் மகத்துவம் பற்றியும், நகரத்திற்கு ஏன் போக வேண்டாம் என்பதையும் வலியுறுத்தி பல முறை பேசுவார். கிராமத்தை தாண்டி செல்ல வேண்டும், தான் விருப்பப்பட்ட மாதிரி வாழ வேண்டும் என்ற விருப்பத்தை உறுதியாக சொல்லிவிட்டு கிளம்பிடுவார். இங்கு என்ன சிக்கல் என்றால், “மற்றவர்கள் மாதிரி நாமும் காசு பணம், காரு, பங்களானு வசதியா வாழ வேண்டாமா?” என்று முருகன் சொல்வதுபோல் வசனம் வரும்.

ஆனால், கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கியோ அல்லது வெளிநாடுகளுக்கோ வேலைக்கு செல்பவர்களின் உண்மையான நிலை என்ன?. கிராமத்தில் தன்னிறைவாக வாழ்வதற்கு வசதிகள் இருப்பதுபோலவும் பணத்தின் மீதான ஆசையில் அவர்கள் அங்கிருந்து கிளம்பிவிடுவதாகவும் இயக்குநர் நினைக்கிறார் போல. உண்மை என்னவென்றால் கிராமத்தில் வாழ்வதற்கான சூழலே அற்றுபோன நிலையில் வேறு வழியில்லாமல் வாழ்வதற்கான ஆதாரங்களைத் தேடித்தான் அங்கிருந்து புறப்பட்டு மனிதர்கள் பல ஊர்களுக்கும் செல்கிறார்கள். கிராமத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்த எந்த புரிதலும் இல்லாமல் எப்படி ஒரு இயக்குநரால் படம் எடுக்க முடியும்.

ஒரு வேளை ராமராஜன் கதாபாத்திரம் வெளிநாடே செல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் வீட்டின் நிலை எப்படி இருந்திருக்கும். வெற்றிக்கொடி கட்டு படமும் என்னதான் மோசடிகளை வெளிச்சம் போட்டு காட்டினாலும் அதுவும் உள்ளூரில் பிழைத்துக் கொள்ள முடியும் என்ற கருத்தையே வலியுறுத்தும். இப்படியான கதைகள் யதார்த்த சூழலை முற்றிலும் மறுப்பதுபோலவே இருக்கிறது.

கிரைண்டர் வேண்டாமா? ஆண்களா சமைக்கிறார்கள்?

படத்தில் மிகவும் முக்கியமான மற்றொரு கருத்து கிரைண்டர் வேண்டாம் என்று சொல்லும் கருத்து. விவசாயத்தில் டிராக்டர் வேண்டாம்; மாட்டை வைத்தே உழுவேன் என்று பலரும் சொல்வதுபோலவே இதுவும் இருக்கிறது. அம்மியிலும் உரலிலும் அரசி மாவு அரைத்து அதில் இட்லி சுட்டால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.. வீடுகளில் ஏற்கனவே பெண்கள் தலையில் மொத்தமாக சமையல் வேலை சுமத்தப்பட்டிருக்கிறது. அதுவும் அன்று கூட்டுக் குடும்பங்களில் இருந்தவர்கள் இதுபோல் சமையல் வேலைக்கே தங்களின் மொத்த ஆற்றலையும் கொடுத்து வந்தார்கள்.

இட்லி கடை
இட்லி கடை

சமூகம் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் போது அதனை வரவேற்க வேண்டும். எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் மனோபாவம் தான் இப்படி பழைய பொருட்களின் மீது ஒருவித மீட்டுருவாக்கத்தை செய்யும். உண்மையில் தினமும் அப்படி வாழ்ந்து வந்தவர்களை கேட்டால் அவர்கள் சொல்வார்கள் அந்த வாழ்க்கை எவ்வளவு கொடியது என்று.

அபத்தமான கருத்தை விதைக்கும் இட்லி கடை
WICKET QUEEN | ஆல் ரவுண்டராக கலக்கும் குயின்! நிராகரிப்புகளை கடந்து சாதனை.. யார் இந்த தீப்தி சர்மா?

கிராமத்தை பற்றி என்ன புரிதல் இருக்கு?

கிராமத்தை ஒரு தூய உலகம் போல் எப்பொழுதும் சித்தரித்துக் கொண்டே இருக்கிறது சினிமாக்கள். நகரத்தை பார்த்தால் ஒரு வித ஒவ்வாமையும் இவர்களுக்கு இருக்கிறது. உண்மையில் நகரம், கிராமம் எல்லா இடங்களையும் மனிதர்களே உருவாக்குகிறார்கள். எல்லா இடத்திலும் மனிதர்களே வாழ்கிறார்கள். கிராமங்கள் ஒன்றும் அமைதியின் உருவத்தில் இருக்கும் இடங்கள் கிடையாது.

இட்லி கடை
இட்லி கடை

நட்பு, பாசம், காதல் இவையெல்லாம் இருப்பதுபோலவே குலப்பெருமை, பகை, சாதிப்பெருமை, சொந்த அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பகை, போட்டி, பொறாமை என பல விஷயங்கள் கிராமங்களில் இருக்கவே செய்கின்றது. கிராமத்தில் வாழ்ந்து பார்த்தால் தெரியும். எப்பொழுதோ 10 நாட்களுக்கு ஊருக்கு வந்து இருந்துவிட்டு செல்பவர்களுக்கு கிராமத்தைப் பற்றி என்ன புரிதல் இருக்க முடியும். கிராமங்களை அதீத எதிர்மறையாகவே அல்லது அதீத நேர்மறையாகவோ காட்டத்தேவையில்லை. அதன் இயல்பில் இருந்தே சரி தவறுகளை காட்டலாம்.

பணம் குறித்த அட்வைஸ்

நீண்ட நாட்களாகவே பணம் மனிதனுக்கு தேவையா இல்லையா என்பது குறித்த உரையாடல் நடந்து கொண்டு இருக்கிறது. அதாவது, அளவுக்கு அதிகமாக பணம் சம்பாதித்துவிட்டு அந்த வசதியில் வாழும் ஒருவன், பணம் நிம்மதியை எல்லாம் கொடுக்காது என்று பக்கம் பக்கமாக வசனம் பேசுவது பொய்யானது. எதுவும் இல்லாத நிலையில் இருந்து போட்டி போட்டு முன்னேற துடிக்கும் பலரும் அது மோசமான கருத்தை விதைக்கும். பணத்தின் மூலம் கிடைக்கும் வாழ்வானது ஒரு மனிதருக்கு வாழ்க்கையை கொடுக்கும், மரியாதை கொடுக்கும், மற்றவர்களுடன் இணைந்து வாழ்வதற்கான பிணைப்பை கொடுக்கும்.

இட்லி கடை
இட்லி கடை

வாழ்வின் அத்தியாவசியத்திற்கே சிரமப்படும் நபர்களுக்குதான் பணத்தின் அருமை தெரியும். சிலருக்கு ஆடம்பரமாக இருப்பது சிலருக்கு அத்தியாவசியமாக இருக்கும். சிலருக்கு இலவசங்களாக இருப்பது சிலருக்கு தேவையாக இருக்கும். அதனால், பணத்தில் நிறைவடைந்த நிலையில் இருந்து பணத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவது யதார்த்தத்திற்கு ஒத்துவராது.

அபத்தமான கருத்தை விதைக்கும் இட்லி கடை
ப. சிதம்பரம் எழுதும் | சாதி, மத கண்ணிகளிலிருந்து மீளுமா பிஹார்?

திரைக்கலை இரு முனை கத்தி போன்றது?

இன்றைய நாளில் மற்ற எல்லா வடிவங்களை தாண்டி சினிமா எனும் கலை மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. திரைமொழி மூலமாக சமூகத்திற்கு ஆக்கபூர்வமான சமூகத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துவது போன்ற கதைகள் சொல்ல முடியும். அது விரைவாக மக்களிடம் சென்று சேரும். அதே நேரத்தில் நல்ல திரைமொழியில் மோசமான கருத்துக்களையும் சொன்னால் அதுவும் மக்களிடம் சென்று அவர்களை பின்னோக்கி இழுக்கும். ஆகவே இது இரு முனை கத்தியாகவே உள்ளது.

இட்லி கடை
இட்லி கடை

மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருக்க வேண்டும். உறவுகளை கவனித்துக் கொள்ள வேண்டும். பிறந்து வளர்ந்த இடங்களை மறந்துவிடக் கூடாது. ஒரு எந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்ந்துவிடக் கூடாது. இதெல்லாம் தேவையான கருத்துகள் தான். ஆனால், அவற்றையெல்லாம் சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் பழமைவாத கருத்துக்களுடன் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ். அவருக்கு கிராமும் புரியவில்லை, நகரமும் புரியவில்லை. அசுரன், கர்ணன், வடசென்னை போன்ற படங்களில் நடித்தவர், பாலிவுட் ஹாலிவுட் வரை சென்றவர். ஆனால், கிராம வாழ்க்கையை சிலாகித்து படம் எடுப்பதுதான் முரண்.

இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய பத்திர்கையாளர் சுகுணா திவாகர், “இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. நுகர்வுக் கலாச்சாரம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது; எளிய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமென்பதில் தவறு கிடையாது. அதற்காக கிரைண்டர் வேண்டாம் ஆட்டுக்கல்தான் வேண்டும் என்பதல்ல. பெரும்பாலும் சமையல் என்பது இங்கு பெண்களுக்கான பொறுப்பாக இருக்கக்கூடிய நிலையில், இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான இயந்திரங்கள் பெண்களின் உடலுழைப்பைக் குறைப்பதற்கு பெரும்பங்கை வகித்திருக்கின்றன. மீண்டும் பழைய முறைக்கு திரும்ப வேண்டுமென்பது, நேரம் ,மனித உழைப்பு போன்றவற்றை வீணாக்கும். இந்தப் படத்தில் வேண்டுமானால் தனுஷ் மாவாட்டலாம். ஆனால், பெரும்பாலான வீடுகளில் பெண்கள் தான் மாவாட்டுவார்கள்.

சுகுணா திவாகர்
சுகுணா திவாகர்pt web

மனித குல வரலாற்றில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டபிறகு, அதை பின்னுக்குத் தள்ளக்கூடிய பல விஷயங்களை ஒரே படத்தில் கொண்டு வருவது என்பது பிற்போக்குத்தனமான விஷயம். பாட்டி, தந்தை, நான், எனக்குப் பிறகு என் மகனும் இட்லி சுடுவான் எனச் சொல்வது நிச்சயமாக குலத்தொழிலை ஊக்குவிக்கும் செயல்தான். அது பழமை வாதத்தில்தான் நம்மை கொண்டுபோய் நிறுத்தும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com