‘ஜாலியா வாங்க, ஜாலியா போங்க’.. தனுஷின் ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ட்ரெய்லர் வெளியீடு!
பா.பாண்டி, ராயன் முதலிய வெற்றிபடங்களை இயக்கிய நடிகர் தனுஷ், தற்போது ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
பா.பாண்டி திரைப்படத்தில் முன்னாள் காதலர்களின் சந்திப்பை வயது முதிர்ந்த பிறகு ஏற்படுத்தி கொடுத்த தனுஷ், ராயன் திரைப்படத்தில் அப்படியே முதல் படத்திற்கு மாறாக சகோதரர்களுக்கு இடையேயான கதைக்களத்தை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் வெற்றிப்படமாக மாற்றியிருந்தார்.
இந்நிலையில், தற்போது ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை சமகால இளைஞர்களுக்குள் நிகழும் காதல் படமாக இயக்கியுள்ளார். பிப்ரவரி 21-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
டிரெய்லர் எப்படி இருக்கிறது?
நடிகர் தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்தியூ தாமஸ் முதலியோர் சேர்ந்து நடித்துள்ளனர். நடிகை பிரியங்கா மோகன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டடித்துள்ளன. படம் வெளியாக இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், NEEK படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
டிரெய்லரை பொறுத்தவரையில், தொடக்கத்தில் வரும் தனுஷ் ’இது வழக்கமான கதை தான்’ என கூற டிரெய்லர் ஆரம்பமாகிறது. இரண்டு காதலர்கள் பிரிந்துவிட்ட நிலையில், ஜெஃப் ஆக வேலை செய்யும் காதலன் மீண்டும் ஒரு பெண்ணை காதலித்து வீட்டாருடன் பெண் பார்க்க செல்கிறார். அதேவேளையில் இன்னொரு பக்கம் பிரிந்துவிட்ட காதலிக்கு மற்றொரு திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. இப்படி செல்லும் கதையில் Love-க்கும் Love Failure-க்கும் இடையில் காதலனான ஹீரோ என்னவாகிறார், முடிவில் என்ன நடக்கிறது என்பதே கதையாக இருக்கிறது.
லவ், பிரேக்கப், மீண்டுமொரு லவ், அர்ரேஞ்சு மேரேஜ், நண்பர்களுடனான கலகலப்பான காட்சிகள் என டிரெய்லரானது ரசிகர்களுக்கு ஜாலியான ஒரு படமாக காட்டும்வகையில் கட் செய்யப்பட்டுள்ளது. டிரெய்லரின் முடிவிலும் ‘ஜாலியா வாங்க, ஜாலியா போங்க’ என்ற வசனத்தை தனுஷ் சொல்கிறார்.
தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை என்ற மற்றொரு திரைப்படமும் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.