தனுஷின் அங்க அடையாளங்களை தாக்கல் செய்ய உத்தரவு

தனுஷின் அங்க அடையாளங்களை தாக்கல் செய்ய உத்தரவு
தனுஷின் அங்க அடையாளங்களை தாக்கல் செய்ய உத்தரவு
Published on

நடிகர் தனுஷை மகன் எனக்கோரும் தம்பதியர் தாக்கல் செய்துள்ள மாற்றுச் சான்றிதழில் இருக்கும் அங்க அடையாளங்கள் அவரது உடலில் உள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தனுஷின் வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கோரினர். அதோடு தங்களுக்கு மாதம் 65 ஆயிரம் ரூபாயை வழங்க தனுஷூக்கு உத்தரவிடக்கோரி இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நடிகர் தனுஷ் தரப்பு, அவரின் பள்ளி சான்றிதழ்களின் உண்மை நகல்களையும், அவரை தங்களின் மகன் என உரிமை கோரும் கதிரேசன் தம்பதி தரப்பினர் அதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரும் கதிரேசன் தரப்பில், மச்சம் உள்ளிட்ட அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்ட பத்தாம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

தனுஷ் தரப்பிலும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டன. அதில் அங்க அடையாளம் குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷி்ன் உடலில் உள்ளதா என்பதைக் கண்டறிந்து அது தொடர்பாக தனுஷ் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது தனுஷ் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், கதிரேசன் தரப்பில் அவர்களின் மகன் கலைச்செல்வன், பத்தாம் வகுப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பிளஸ் 1 படிப்பில் சேர்ந்து படிப்பை பாதியில் விட்டு சினிமாவில் நடிக்கச் சென்றதாக கூறுகின்றனர். ஆனால் நடிகர் தனுஷ் அதற்கு முன்பாகவே, ‘துள்ளுவதே இளமை’ படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். கதிரேசன் கோரிக்கையில் உண்மையில்லை என்றார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, இந்த வழக்கில் எந்த தரப்பு தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி விசாரணையை பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com