யார் இந்த கான்ட்ராக்டர் நேசமணி ? சுவாரஸ்யமாக எழுதும் நெட்டிசன்கள்..!

யார் இந்த கான்ட்ராக்டர் நேசமணி ? சுவாரஸ்யமாக எழுதும் நெட்டிசன்கள்..!
யார் இந்த கான்ட்ராக்டர் நேசமணி ? சுவாரஸ்யமாக எழுதும் நெட்டிசன்கள்..!

யார் இந்த கான்ட்ராக்ட்ர் நேசமணி என்று சிலர் கேட்கிறார்கள். அவரின் அன்பும், பண்பும் தெரியாத மக்கள் இன்னமும் இந்த உலகில் இருக்கிறார்களா..? என்ற சந்தேககத்துடன் நேசமணி யார் என்ற உண்மையை இந்த உலகிற்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே வயிற்றுக்குள் ஒரு பேனில்லாமல் ஏசி இல்லாமல், திரும்பக் கூட இடம் இல்லாமல் அவர் பட்ட துயரங்கள் ஏராளம். அதனால் கதறி அழுத நிலையிலேயே நேசமணி இந்த உலகத்திற்கு அறிமுகமானார். ஒரு சில காரணங்களால் சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்து தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.

தன் அத்தை மகளான திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அவரை அடைய சில சிரத்தைகளும் எடுத்தார். திவ்யா நேசமணியின் அழகை பார்த்து மயங்க.. மயங்க.. தன்னையே ஒரு ஹீரோவாக நினைத்துக் கொண்டார். கருப்பு சிங்கமாக உருவெடுத்தார். அதுமட்டுமில்லாமல் திவ்யாவிற்காக எதையும் செய்யலாம் என துணிந்தார். ஆனால் வாழ்க்கை விளையாடியது. நேசமணியின் வாழ்வில் திவ்யா இல்லை என்றானது. அப்போதும் கூட நேசமணி மனம் தளர்ந்து போய்விடவில்லை. தன் காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி.

வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்டனில் வக்கீலாக வேலை செய்தாலும் நேசமணிக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை. மீண்டும் குற்றாலத்தில் வந்து ஒரு டிவிஎஸ் 50 வாங்கிக்கொண்டு, அடிக்கடி கடலைமிட்டாய் சாப்பிடுவதோடு சரி என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் நேசமணி. இப்படி இருந்த நேரத்தில்தான் போலீசார் அவரை கைது செய்து கொரில்லா செல்லில் அடைத்தனர். ஆனாலும் சிறைக்குள்ளும் சில ஆண்களால் தொல்லை வந்தது. ஏனென்றால் நேசமணியின் அழகு அப்படி. பார்த்தாலே பலரும் மயங்கும் வசீகர அழகு கொண்டவர் நேசமணி. சிறை தொல்லை தாங்காமல், அதிலிருந்து ஹெல்மெட்டோடு ஒரு ஆட்டோவில் தப்பி வந்து மீன் வியாபாரம் செய்தபோதும், அவருடைய விற்பனை கரும்பலகையை அந்நிய சக்திகள் அழித்த கதையும் மிகவும் கவலைக்குரியது.

எதுவும் சரியாய் போகவில்லை என்று திருடியாவது பிழைப்போம் என்று முடிவெடுத்தபோது ஒரு குதிரை ஏமாற்றிவிட பீச்சில் கையும் களவுமாக பிடிபட்டார் நேசமணி. வாழ்க்கை நேசமணியை துரத்தியது. ஆனால் நேசமணி துவண்டுபோகவில்லை. சண்முகம் சலூன் கடை வைத்து ஸ்டெப் கட்டிங்க், ஸ்டைல் கட்டிங்க், பாப் கட்டிங்க் என்று தொழிலை கற்றுக்கொண்டு சைன் பண்ண ஆரம்பித்தார் நேசமணி. ஆனால் அந்த வேலையும் சில சக்திகளால் போய்விட வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற தன்னார்வமற்ற சங்கத்தை துவங்கினார் நேசமணி. கட்டதுரையின் பொறாமையாலும் அரசியலாலும், அவர் தேங்காய் உரித்து வைக்க மற்றவர்கள் விளக்கை ஏற்றும் கொடூரமும் நேசமணியின் வாழ்வில் நடந்தேறியது.

யார்யாரோ மூலமாகவே ஒரு பெரிய பேலஸ்ஸில் ஒரு கான்ட்ராக்டை வாங்கி பங்களாவுக்கு வெள்ளையடிக்ப் போனார் நேசமணி. அங்குதான் தன் அண்ணன் மகனாலேயே சுத்தியல் தாக்குதலுக்குட்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நேசமணி. மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நேசமணியின் உடல்குறை குறித்து அவ்வப்போது தகவல்கள் கசிந்து வருகிறது. நேசமணி இட்லி சாப்பிட்டார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. வெளிநாட்டு தலைவர்களும் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு அவரின் உடல்நிலை குறித்து விசாரிக்கின்றனர். இந்தியாவில் முடியாவிட்டால் எங்கள் நாட்டிற்கே நேசமணியை கொண்டுவந்து விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என பிடிவாதமாக அவர்கள் கூறுகின்றனர். 

உள்ளூரிலோ பால்காவடி எடுப்பது, தீ மிதிப்படி என நேசமணிக்காக பிரார்த்தனைகள் குவிகின்றன. அனைவரின் அன்பாலும், பிரார்த்தனையாலும் நேசமணி மீண்டும் கட்டுடல் சிங்கமாய் கர்ஜித்த குரலாய் வீறு கொண்டு எழுவார் என நம்புவோமா.. தற்போது நேசமணிக்காக நாமும் பிரார்த்திப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com