'வீர ராஜா வீரா' பாடல் வழக்கு.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான உத்தரவு ரத்து!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.
’பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தில் வரும் ’வீர ராஜா வீரா’ பாடல் என்பது தனது தந்தை மற்றும் உறவினர் ஆகியோர் இயற்றிய ’சிவா ஸ்துதி’ என்ற பாடல் ஆகும். எனவே அதற்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என பாரம்பரிய ஃபயாஸ் வசிஃபுதீன் தாஹர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ’பொன்னியின் செல்வன்’ படத்தின் ’வீரா ராஜா வீரா’ பாடல் ’சிவா ஸ்துதி’ பாடலைப் போலவே உள்ளது. ’சிவா ஸ்துதி’ பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலால் ’வீர ராஜ வீரா’ பாடலை இயற்றியுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்பதை உத்தரவில் பதிவுசெய்து, பதிப்புரிமை மீறல் தொடர்பாக 2 கோடி ரூபாய் தொகையை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் இசையமைப்பாளர ரஹ்மான், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் செலுத்த வேண்டும். 2 லட்ச ரூபாயை தாகருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.
அதன்பின் உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் தாக்கல் செய்த டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹரி சங்கர் தலைமையிலான அமர்வில் விசாரணை செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிபதிகள் டெல்லி உயர்நீதிமன்ற தனிநீதிபதியின் முந்தைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ரஹ்மான் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நாங்கள் ஏற்கிறோம். கொள்கையளவில் தனி நீதிபதியின் ஆட்சேபனைக்குரிய உத்தரவை நாங்கள் ரத்து செய்கிறோம் எனவும். அதேவேளையில், இந்த விசயத்தில் உரிமை மீறல் அம்சத்திற்குள் செல்லவில்லை என்றும் தெளிவுபடுத்தினர்.