ஆசிட் வீசப்பட்டப் பெண்ணாக மாறிய தீபிகா: வைரலான பர்ஸ்ட் லுக்!
திராவக வீச்சில் பாதிக்கப்பட்டப் பெண்ணாக தீபிகா படுகோன் நடக்கும் ’சப்பாக்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியை சேர்ந்தவர் லட்சுமி அகர்வால். குட்டா என்ற இளைஞர், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும் படி இவரிடம் வற்புறுத்தினார். மறுப்புத் தெரிவித்து வந்தார் லட்சுமி. இதனால் ஆத்திரமடைந்த குட்டா, அவன் நண்பன் நதீம் சையத்துடன் சேர்ந்து லட்சுமி மீது 2005 ஆம் ஆண்டு திராவகம் வீசினார். அப்போது லட்சுமியின் வயது 15.
(லட்சுமி அகர்வால்)
இந்த விவகாரம் அப்போது இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதுதொடர்பான வழக்கில்தான், கடைகளில் திராவகம் விற்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து திராவகத் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்காக குரல் கொடுத்துவரும் லட்சுமி, சில டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். திராவகத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சான்வ் என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.
இவரது வாழ்க்கை கதை சப்பாக் (Chhapaak) என்ற பெயரில் சினிமாவாகிறது. இதில், தீபிகா படுகோன், லட்சுமி அகர்வாலாக நடிக்கிறார். மேக்னா குல்சார் இயக்கும் இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தீபிகாவே தயாரிக்கிறார்.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில், அடையாளம் தெரியாத அளவுக்கு தீபிகா படுகோன், மாறியுள் ளார். இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது.