காந்தாரா படம் பேசியிருக்கும் அரசியலில் இத்தனை ஆபத்துகளா? மேக்கிங்கில் புதைந்த உண்மைமுகம்!

காந்தாரா படம் பேசியிருக்கும் அரசியலில் இத்தனை ஆபத்துகளா? மேக்கிங்கில் புதைந்த உண்மைமுகம்!
காந்தாரா படம் பேசியிருக்கும் அரசியலில் இத்தனை ஆபத்துகளா? மேக்கிங்கில் புதைந்த உண்மைமுகம்!

சமீபத்திய திரைப்படங்களில் அதிகம் பேசப்பட்ட படம் காந்தாரா! சிறப்பான மேக்கிங் காட்சிகளால் பெரும்பாலன மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரு நல்ல படத்திற்கு சிறப்பான மேக்கிங் மட்டும் போதுமா? அது பேசியிருக்கும் அரசியல் குறித்து பொருட்படுத்த தேவையில்லையா? 

காந்தாரா படத்தின் இயக்குநரும், நாயகனுமான ரிஷப் ஷெட்டியின் இயக்கமும், நடிப்பும் நிச்சயம் பாராட்டுக்குரியது தான். அதற்காக ஒரு துளி விஷம் தானே என்று செரித்துகொள்ள முடியுமா என்ன?  எப்போது ஒரு படம் சிறுபான்மையினரையும், விளிம்பு நிலை மக்களை பற்றி பேசும் போது அதில் அறமும், அக்கறையும் இருக்க வேண்டியது அடிப்படையான தார்மீகம். காந்தாராவில் இவை இல்லை என்பது தான் பிரச்சனை. 

ஆதிக்கசாதி மனநிலை கொண்டவர்களுக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் சுரண்டல் செய்வதில் தயக்கங்கள் இல்லை என்பதை, ’ வில்லன் தேவேந்திரன் வீட்டில் வேலை செய்யும் பெண் பாலியல் சுரண்டல் செய்யும்காட்சிகள் மற்றும் எல்லா மதத்திலும், சாதியிலும் பெண் என்பவள் தாழ்த்தப்பட்டவள் தான் என்பதைப் பேசும் கதாபாத்திரம் தான் வில்லனின் மனைவி அம்மக்கா!

வீட்டில் வேலைப்பார்க்கும் பெண்ணை இரவில் சந்திக்கச் செல்லும் கணவனை எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல், டார்ச் லைட் கொடுக்கும் இடம், பழங்குடி மக்களுக்கு எதிராக தனது வீட்டில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்த்துப் பேசமுடியாமல் அமைதியாக இருக்கும் இடங்கள், இறுதியாக பழங்குடியினர் திருவிழாவில் கலந்துகொள்ளும் தருணம் என படம் முழுக்க அமைதியாக, பெண்ணடிமைத்தனத்தின் முகங்களை படம் முழுக்க கண்களாலேயே பேசியிருக்கிறார் அம்மாக்கா. இந்த ரெண்டு விசயங்களை தெளிவாகவும், சரியாகவும் இயக்குநர் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.  

ஆனால்..

சிறுபான்மையினர் குறித்து இந்தியாவில் என்ன மாதிரியான சித்திரம் வரையப்பட்டு வருகிறது என்று நமக்கு நன்றாகவே தெரியும். அவ்வாறான அபாய சூழலில் நாம் இருக்கும்போது, ஊரை காப்பாற்ற, இஸ்லாமியர்களின் கைகளில் வெடிகுண்டு வெடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி! 

காந்தாரா பேசுவது, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை அல்ல.. இந்துத்துவமும், இஸ்லாமிய வெறுப்பு மட்டும் தான்!

நிலப்பிரபுத்துவத்தினாலும், சாதி வன்மத்தினாலும் வளர்த்தெடுக்கப்பட்ட  இந்திய சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் பழங்குடியினரை பற்றி பேச அத்தனை விசயங்கள் உண்டு. டிஜிட்டல் இந்தியாவில் இன்றளவும் எந்த ஒரு அடையாள அட்டையும் பெற முடியாமல் , அரசாங்கத்தால் அலைக்கழிப்பு செய்யப்பட்டு வருகிறார்கள். வீடு, பட்டா, கரண்ட், கல்வி என எதுவும் அவர்களுக்கு இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. காட்டை தாண்டி நகரத்துக்குள் வந்தால், கூலிவேலைகள் கூட கிடைப்பதில் சிரமம். எந்நேரமும் சந்தேக கண்களுடன் பழக்கும் மக்கள் என சொந்த மண்ணில் எதை செய்தாலும் குற்றவாளியாக்கப்பட்டு விடுவோமோ என்ற பதற்றத்துடன் உயிர் பிழைத்து கிடக்கிறார்கள் பழங்குடியினர். இந்தியா முழுக்க இருக்கும் பழங்குடியினர்களின் நிலை இதுதான்!

இப்படியான எந்த நிஜத்தையும் காட்டாமல், எந்நேரமும் குடித்துவிட்டு ஊதாரியாக சுற்றும் ஹீரோவை ரொமாண்டிசைஸ் பண்ணியிருக்காரு இயக்குநர்.  படத்தில் யாரும் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ போவது போன்ற காட்சிகள் இல்லை. சரி போகட்டும்.., கதாநாயகி தான் போலீஸ் ஆகுகிறாளே என்றால்.. அவளை சிறுமைபடுத்துகிறார் வனதுறை அதிகாரி. இப்படிப்பட்டவரை தான் ’’நல்ல போலீஸ்’’ என இயக்குநர் சித்தரித்துள்ளார்.

தொடர்ந்து அழுத்தங்கள் அதிகரிக்கவே, ஒரு சமயத்தில் கதாநாயகியும் ‘’நான் வேண்ணா வேலையை விட்டுவிடவா?’’என்கிறாள். விளிம்புநிலை மக்கள் கொஞ்சம் மேல் ஏறி வரும் போது இப்படியான அழுத்தங்கள் கொடுத்து தான் அவர்களை விரட்டி பார்க்கும் அதிகாரவர்க்கம். 

ஒரு புரிதலுக்காக ஜெய் பீம் படத்தை எடுத்துக்கொள்வோம். அப்படம் அரசாங்கத்தால் பழங்குடியினரான இருளர் சமூகம் எத்தனை சித்திரவதைகளை அணுபவிக்கிறார்கள், எப்படி குற்றவாளிகளாகப்படுகிறார்கள் என்பதை காட்டியது. இங்கு ஜெய்பீம் படத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. இப்போ காந்தாரா படமும் கொண்டாடப்படுகிறது என்றால் இந்த முரண் எதனால்? படம் நல்ல ஒரு தியேட்டர் எக்ஸ்பிரியன்ஸை கொடுத்தால் போதுமானது என நினைத்துவிட்டோமா?

நம் அனைவருக்கும் தெரியும், ஒடுக்கப்பட்டவர்களை கல்வி தான் காப்பாற்றும்..ஆனால் படம், தெய்வம் தான் காப்பாற்றும் என்கிறது! 

சிற்றரசனால் வழங்கப்பட்ட நிலத்தை, மீண்டும் பெற நினைக்கும் அரச குடும்ப வாரிசுகளிடமிருந்து பழங்குடி மக்கள் தெய்வத்தின் துணையால எப்படி நிலத்தை காப்பாற்றிக் கொள்கிறார்கள் என பேசுகிறது காந்தாரா. இது ஒரு கற்பனை படம் என வைத்துகொண்டாலும், கற்பனைகள் நிஜத்தின் கோர முகத்தை மறைத்துவிட்டு, தனக்கு தேவையான அரசியலை பேசக் கூடாது அல்லவா? 

காடுகளில் மனிதர்களுக்கு இடமில்லை என்ற ரீதியில் காட்டுக்குள் விறகு வெட்டாதே, வெடி வெடிக்காதே, வேட்டையாடாதே என்று உத்தரவிடும் வனத்துறை அதிகாரி, நிலத்தை ’ரிசர்வ் ’ காடாக மாற்றத் துடிப்பவரை நம்பி நில மீட்பு என வழக்குப் போட மக்கள் சம்மதிக்கிறார்கள். மேலும் கிளைமாக்ஸ் காட்சியில், வனத்துறை அதிகாரியும் , ஹீரோவுக்கு சமாதானமாகும் போது, வனத்துறை அதிகாரி , ”நம்ம ரெண்டு பேருக்கும் எண்ணங்கள் ஒன்று தான்என சொல்வார். 

அரசகுடும்ப வாரிசான தேவேந்திர சுத்தூறு என்ற வில்லன் கதாபாத்திரம், பழங்குடி மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றி, தன் பெயரில் நிலங்களை மாற்றி எழுதி வைத்திருப்பதை, மீட்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம்..

ஆனால், மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீண்டும் மக்களுக்கானதாக மாற்ற நினைக்கும் ஹீரோவின் எண்ணமும், மக்களுக்கான நிலத்தை மொத்தமும் அரசுடைமையாக வேண்டும் என எண்ணும் வன அதிகாரியும் எண்ணமும் எப்படி ஒன்றாகும்?! 

ஒரு வேலை வன அதிகாரி திருந்திவிட்டாரா என்றால்.. அதுவும் இல்லை. இறுதிவரை இயக்குநர் ரிஷப் ஷெட்டியின்  ‘நல்ல போலீஸ்’ அரசும், சட்டமும் மக்களுக்காக தான் உணர்ந்ததாக ஒரு காட்சி கூட இல்லை!

சரி.. வன அதிகாரி நினைப்பது போல், நிலங்கள் அரசுக்குச் சென்றால் என்ன? அதுதானே சரி என்றால்..

இந்தியாவில் எந்தவொரு பகுதியிலிருக்கும் பழங்குடியினரிடம் சென்று கேட்டுப் பாருங்கள் அல்லது அவர்களைப் பற்றின செய்திகளைத் தேடிப்படித்துப்பாருங்கள்.

‘’ அரசு எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த முயல்கிறது.. அரசு எங்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க மறுக்கிறது.. அரசு எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க பல சட்டங்களைக் கொண்டு வருகிறது.. எங்களை குற்றவாளிகளை ஆக்குகிறார்கள் ” போன்ற செய்திகள் தான் உங்களுக்கு கிடைக்கும்.

பழங்குடியினரின் சரியான மாற்று வாழ்வாதாரம் ஏற்பாடு செய்யாமல், உடனடியாக அவர்களை நாட்டுக்கு அப்புறப்படுத்தத் துடிக்கும் அரசு எப்படி பழங்குடியினர்களுக்கு நிலத்தை திருப்பிகொடுக்கும்? கடைசி வரை, அவர்கள் கோர்டுக்கும், காட்டுக்கும் தான் அலைந்துகொண்டிருப்பார்கள். 

பழங்குடியினருக்கான சில சட்டங்கள், அமைப்புகள் இல்லை என்றால்.. இவர்கள் என்றோ நகரங்களுக்குள் தூக்கி ஏறியப்படுயிருப்பர்.

ரியாலிட்டி இவ்வளவு கசப்பாக இருக்க.. நிலங்களை அரசுக்குச் செல்வது போல் காட்டியிருக்கும் இயக்குநர் ரிஷப் ஷெட்டியின் அரசியல் நிலைப்பாடு என்ன? எதை அறம் என்ன நினைக்கிறார்? என்பதை கேள்வி கேட்ட வேண்டியுள்ளது.

காந்தாரா படத்தின் விளைவு எப்படி இருக்குமென்றால்.. நாளை பழங்குடியினர் ஒரு இடத்தில் நிலமீட்பு கோரிக்கைக்காக போராட்டிக்கொண்டியிருந்தால்.. ‘’காட்டின் நிலம் அரசுக்குச் சொந்தம் தானே.. கொடுக்க வேண்டியது தானே..” என்ற எண்ணம் சாமானியர்களிடம் தோற்றும் அபாயம் இருக்கிறது. 

அடுத்தது.. பஞ்சுருளி தெய்வம்!

அரசன் வழங்கிய நிலத்தை தெய்வத்தின் துணை கொண்டு காப்பாற்றிக்கொள்கிறார்கள் என்பதே கதைக்கான களம். பழங்குடி மக்களுடைய தெய்வ வழிபாட்டையும், நம்பிக்கையையும் படம் பேசுகிறது என எடுத்துக்கொள்வோம். பஞ்சுருளி அவர்களுடைய தெய்வம்! காடுகளில் வாழும் மக்கள், காட்டுப் பன்றியைத் தெய்வமாக வழிபடுகிறார்கள். மறுபக்கம் ஹீரோ பன்றியை வேட்டையாடுகிறார்.

தெய்வத்தையே வேட்டையாடிக் கொன்று சாப்பிடுகிறாயே? என பஞ்சுருளி தெய்வத்தின் மனது புண்படாமல் மக்களுக்காக நில அபகரிப்பைக் குறித்து கோபம் கொள்ளும் பஞ்சுருளி தெய்வத்தின் தார்மீக மனதை நிகழ அரசியலோட தொடர்ப்பு படுத்தினால், உணவு அரசியலில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அப்ப இயக்குநர் செய்தது சரிதானே என்றால்.. முன்பு சொன்னது தான்! ஒடுக்கட்டவர்களை கல்வி தான் காப்பாற்றும். அவர்களுக்கு தெய்வ நம்பிக்கையை கொடுப்பது மறைமுக சூழ்ச்சி! 

இறுதியாக அனைவராலும் பாராட்டப்பட்ட வராஹ ரூபம் பாடல் ஒரு திரிபுவாதம்!

வராஹ ரூபம் பாடல் நன்றாகத் தானே இருக்கிறது. அதில் என்ன பிரச்சனை என கேட்கிறீர்களா?  நாட்டார் தெய்வமான பஞ்சுருளி இறுதியில் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹ மூர்த்தியாக முடிகிறதே.. அது தான் பிரச்சனையே..

ஒருவேளை இயக்குநர், நாட்டார் தெய்வங்களின் வரலாற்று, அடையாளங்களும் திருடப்பட்டு நாளடைவில், வைணதெய்வமான வரலாற்றுத் திரிபு நடந்ததை பேசுகிறாரோ என்றால்.. அப்படியிருக்க வாய்ப்பில்லை என்றே தோணுகிறது. காரணம் படம் முழுக்க இஸ்லாமிய வெறுப்பு, இந்துத்துவாத எண்ணங்களை பதிய வைத்த இயக்குநர் எப்படி இந்த வரலாற்று திரிப்பை காட்டியிருக்க முடியும்? எனவே நாட்டார் தெய்வம் விஷ்ணுவின் அவதாரம் தான் என கலை மூலம் திரிபுவாதம் செய்துள்ளார்.

மொத்தமாக பழங்குடியினர்களின் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பேசிய படமாய், சித்தரிக்கப்படும் வரும் காந்தாரா திரைப்படம் பேசியிருப்பது, அதிகாரவர்க்க ரொமாண்டிசைஸ் , வரலாறு திரிபுவாதமும், இந்துத்துவமும், இஸ்லாமிய வெறுப்புமும் தான்.

இத்தனை விசயங்களை சிறப்பான மேக்கிங் மூலம் திரைமறைத்து, மக்களையே ரசிக்க வைத்த தந்திரம் இயக்குநருக்கு கைவசப்பட்டுள்ளது..! வாழ்த்துகள் ரிஷப் ஷெட்டி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com