மீண்டும் ஜேம்ஸ் பாண்ட்டாக களமிறங்கும் டேனியல் க்ரெய்க்
பிரிட்டிஷ் நடிகர் டேனியல் க்ரெய்க், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் டேனியல் க்ரெய்க். இதுவரை 4 ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ படங்களிலும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், கடைசியாக ஒரு முறை ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் டேனியல் க்ரெய்க் நடிக்க ஒப்புகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் தி லேட் ஷோ என்றழைக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் ஜேம்ஸ் பாண்டாக மீண்டும் நடிப்பீர்களா? என கேட்கப்பட்டது. இந்தக் கேள்வியை கேட்டவுடன், அதற்கு பதிலளிக்கும் வகையில், ஆம்! நடிப்பேன் என்று டேனியல் க்ரெய்க் பதிலளித்துள்ளார். மேலும் மீண்டும் நடிக்க நான் விரும்புகிறேன், எனக்கு சிறிய இடைவேளை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒரு விழாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிப்பதற்கு பதில் என் மணிக்கட்டை அறுத்துக் கொள்வேன் என டேனியல் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜேம்ஸ் பாண்ட் படத்தின் 25 வது பாகம் 2019 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியாகவுள்ளது. இது அவரது கடைசி ஜேம்ஸ்பாண்ட் படமாக இருக்கலாம் என ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.