\
sai abhyankkar
sai abhyankkarom movie / karuppu movie stage performance screenshot

கருப்புவில் அரிவாள்.. OM-ல் கோடாரி.. மாணவர்கள் அரங்கில் தொடரும் தவறான செயல்!

நடிகர் தனுஷின் ஓம் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
Published on: 
Summary

தனுஷ் நடித்த 'ஓம்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கையில் கோடாரியுடன் பாடல் பாடியது விமர்சிக்கப்படுகிறது. மாணவர்கள் நிரம்பிய அரங்கில் ஆயுதங்களுடன் நடனமாடிய நிகழ்வு, போலி ஆயுதங்களாகவே இருந்தாலும் வன்முறையை ஊக்குவிக்கும் செயலாக பார்க்கப்படுகிறது.

’அமரன்’ பட இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ’ஓம்’. இப்படத்தில் தனுஷ் உடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா என பெரிய திரை நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் நிலையில், படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் தீபாவளியையொட்டி வெளியாகவிருக்கும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி, நவம்பர் 6-ஆம் தேதியான நேற்று, சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. தனுஷ் உடன், மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்ட 'ஓம்' படக்குழுவின் முக்கிய உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்தநிகழ்ச்சியில் படத்தின் ஹிட் பாடலான ’வீழா வீரா’ பாடலை பாடிய இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாணவர்கள் நிரம்பிய அரங்கில் கையில் கோடாரியுடன் தோன்றி பாடலை பாடினார். அவருடன் நடனமாடிய டான்ஸ் குழுவினரும் ஆயுதங்களோடு நடனமாடினர். அது டம்மி ஆயுதங்களாகவே இருந்தாலும் மாணவர்கள் நிரம்பிய அரங்கில் அப்படி செய்தது விமர்சிக்கப்படுகிறது. இதில் பாடலின் வரிகளும் வன்முறையை பாடுவதுபோல எழுதப்பட்டுள்ளது. ஓம் பட நிகழ்வு மட்டுமில்லாமல், கருப்பு திரைப்படத்தின் நிகழ்ச்சியிலும் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மேடையில் பாடலை பாடியிருந்தார் சாய் அபயங்கர். இது ஒரு மேடையோடு நின்றுவிடாமல் மேடைக்கு மேடை தொடர்வது தவறான உதாரணமாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடந்துவரும் நிலையில், இளம்தலைமுறையினர் தவறான பாதையில் செல்லக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. இந்தசூழலில் மாணவர்கள் நிரம்பிய அரங்கில், இசை வெளியீட்டு நிகழ்ச்சி என்ற பெயரில் தொடர்ந்து இப்படி நடைபெறுவது தவிர்க்கப்பட வேண்டியதாகவே பார்க்கப்படுகிறது.

sai abhyankkar
அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்.. தவறுக்கு பொறுப்பேற்று தனுஷ் வருத்தம்!