"நீதிமன்றத்தை விட பெரிய ஆள் என எண்ண வேண்டாம்.. இங்கு எல்லோரும் சமம் தான்!" - விஷாலை கண்டித்த நீதிபதி

நீதிமன்றம் கேட்ட ஆவணங்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாத நடிகர் விஷால் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நடிகர் விஷால்
நடிகர் விஷால்PT

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

விஷாலின் சொத்து விவரங்களை சமிர்பிக்க சொன்ன நீதிமன்றம்!

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

சென்னை நீதிமன்றம்
சென்னை நீதிமன்றம்

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்த நிலையில், அவரது நான்கு வங்கிக் கணக்குகளின் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன, சொத்து ஆவணங்களுடன் செப்டம்பர் 19ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஆஜராக விலக்கு அளிக்கபட்டு இருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதியன்று இந்த வழக்கு நீதிபதி P.T.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால் நடிகர் விஷால் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் முன் எல்லோரும் ஒன்று தான்! எச்சரித்த நீதிபதி!

அதன்படி இன்று விஷால் ஆஜரான நிலையில், நீதிமன்ற உத்தரவிட்டபடி ஆவணங்களை தாக்கல் செய்யாததால், விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் எடுக்க கூடாது என் நீதிபதி கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தை விட பெரிய ஆள் என எண்ண வேண்டாம் என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தில் அனைவரும் எப்படி கருதப்படுகின்றனரோ, அவ்வாறுதான் நீங்களும் கருதப்படுவீர்கள் என விஷால் தரப்பிடம் அறிவுறுத்தினார். நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால் வழக்கறிஞர் மூலம் உத்தரவை பெற்றுவிடலாம் என ஒவ்வொரு மனுதாரரும் நினைக்க தொடங்கிவிடுவார்கள் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

விஷால்
விஷால்

விஷால் தரப்பில் வங்கியிலிருந்து ஆவணங்களை பெற தாமதம் ஆகிவிட்டது என்றும், அதனால் நீதிமன்றம் கேட்ட ஆவணங்கள் நேற்று ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நேற்று ஆன்லைனில் தாக்கல் செய்தது உறுதியாகாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்தார்.

விஷால்
விஷால்

விஷால் தரப்பில் 3 கார்கள், ஒரு பைக் இருப்பதாகவும், இரண்டு வங்கி கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனக்கு சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 75 வயதான தந்தையின் கிரானைட் தொழில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் காரணமாக அவரது வீட்டுக்கடனையயும் விசால் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமக்கு இருக்கும் ஒரு வீடும் அடமானத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு அண்ணா நகரில் இருக்கும் வீடு சொத்து விவரத்தில் சேர்க்கப்படவில்லை என லைகா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இன்னுமா வீட்டுக்கடன் இருக்கு? கேள்வி எழுப்பிய நீதிபதி!

அப்போது நீதிபதி, இவ்வளவு வருடமாக நடிக்கிறார். இன்னும் அவருக்கு லோன் இருப்பதாக கூறுகிறீர்களே என கேள்வி எழுப்பியபோது, ஆம் வீட்டுக்கடன் உள்ளது, அண்ணா நகர் வீடு தன்னுடையது அல்ல தந்தையுடையது, அவரது கிரானைட் தொழில் நட்டம் காரணமாக நான் கடனை செலுத்துகிறேன் என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அடுத்த 28 நாட்களுக்கு படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள இருப்பதால், அடுத்த விசாரணையின்போது ஆஜராக விலக்கு அளிக்கவும் விசால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான விவரங்களை தாக்கல் செய்ய 6 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது.

இதனையேற்ற நீதிபதி, வங்கிகளிலிருந்து கூடுதல் ஆவணங்களை பெறவும், நீதிமன்றம் கேட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்த விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியும், விஷால் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com