அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவோம்: பொன்வண்ணன்

அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவோம்: பொன்வண்ணன்
அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவோம்: பொன்வண்ணன்

நடிகர் சங்க பதவியில் தொடர்வதாகவும், விஷால் தலைமையிலான எங்களது அணி தொடர்ந்து செயல்படும் என்றும் நடிகர் பொன்வண்ணன் கூறியுள்ளார்.

நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் பொன்வண்ணன் இரு தினங்களுக்கு முன்பு கடிதம் அளித்தார். புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற போது எந்தக் கட்சியையும் சாராத நிர்வாகம் அமைய விரும்பியதாகவும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால் வேட்புமனு தாக்கல் செய்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் பொன்வண்ணன் தனது கடிதத்தில் கூறியிருந்தார். 

இதற்கிடையே, பொன்வண்ணனின் ராஜிநாமாவை ஏற்க நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்டோர் மறுத்து வந்தனர். பொன்வண்ணன் அளித்த ராஜிநாமா கடிதத்தை ஏற்கமாட்டோம் எனவும், ராஜிநாமா முடிவை பரிசீலனை செய்யுமாறு கூறியுள்ளதாகவும் நாசர் தெரிவித்தார்.  ஆயினும், பதவி விலகும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும், முடிவை திரும்பப் பெறப் போவதில்லை என்றும் பொன்வண்ணன் கூறியிருந்தார். 

இந்நிலையில், நடிகர் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தனது ராஜினாமாவை நடிகர் பொன்வண்ணன் திரும்ப பெற்றார்.  நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், “தேர்தலில் விஷால் போட்டியிடுவது குறித்து, சங்க பொறுப்பாளர்களிடம் சொல்லவில்லை. சங்கம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த போது, விஷாலின் முடிவு அதிர்ச்சி அளித்தது. விஷாலின் தேர்தல் போட்டி முடிவு எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. விஷால் தேர்தலில் நிற்பது அவரது தனிப்பட்ட விருப்பம். இருப்பினும், நடிகர் சங்க பதவியில் இருந்து விலகிவிட்டு விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது. அரசியல் வேண்டாம் என சொல்லவில்லை. நடிகர் சங்க தேர்தலில் நிற்கும் போது, அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவோம் என கூறி இருந்தோம். கருணாஸ், குஷ்பு, பூச்சி முருகன் உள்ளிட்டோர் ஏற்கனவே அரசியலில் இருந்தனர். அதிமுக சார்புள்ளவர்கள் நடிகர் சங்க தேர்தலில் நிற்கக் கூடாது என ஜெயலலிதா கூறியதால் பலர் போட்டியிடவில்லை. எந்த நோக்கத்திற்காக வந்தோமோ அதுவரை செயல்படுவோம். நடிகர் சங்க வளர்ச்சிக்காக விஷால் தலைமையிலான எங்களது அணி தொடர்ந்து செயல்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com