அன்பிற்கும்தான் எல்லை உண்டோ..?: ஸ்ரீதேவியின் மறைவிற்கு பாகிஸ்தானிலும் இரங்கல்
நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு பாகிஸ்தானை சேர்ந்த திரைபிரபலங்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
தமிழ், இந்தி உள்ளிட்ட பலமொழி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு காலமானார். ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அவரது மரணத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் ஸ்ரீதேவியின் நடிப்பில் கவர்ந்த காட்சிகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து தங்களது இரங்கல் குறிப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா கடந்து புகழ்பெற்ற ஸ்ரீதேவிக்கு பாகிஸ்தானை சேர்ந்த திரைபிரபலங்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சஜல் அலி கான் கூறுகையில் தனது அம்மாவை மீண்டும் ஒருமுறை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் ஸ்ரீதேவியுடன் கடந்தாண்டு வெளியான ‘மாம்’ படத்தில் நடித்தவர். இவர் மேலும் கூறுகையில், “ஸ்ரீதேவி அவர்கள் தனித்துவமானவர்கள். படப்பிடிப்பில் தன்னுடைய மகள் போன்று என்னை பார்த்துக்கொண்டார். என்னுடைய தாயை மீண்டும் ஒருமுறை இழந்தது போன்று உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதேபோல் ஸ்ரீதேவியுடன் ஜோடியாக நடித்துள்ள பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் அட்னான் அலி சித்திக் கூறும்போது, அவரின் மறைவை தன்னால் நம்பவே முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதேபோல் பாகிஸ்தானை சேர்ந்த மற்றொரு நடிகையான மஹிரா ஹானும் ஸ்ரீதேவியின் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்ரீதேவியின் காலங்களில் பிறந்து வளர்ந்ததை ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதுகிறேன். உங்களின் படங்களுக்கு நன்றி.. நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள்” எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சரும் ஸ்ரீதேவியின் மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார்.