முன்னால நிற்கிறேன், கண்ணால சொக்குறேன்... நயன்தாராவை காதலிக்கும் யோகி பாபு
’கோலமாவு கோகிலா’ படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு, நயன்தாராவை காதலிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சிம்பு நடித்த ’வேட்டை மன்னன்’ படத்தை இயக்கியவர் நெல்சன். ஹன்சிகா, தீக்ஷா சேத் உட்பட பலர் நடித்த இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நெல்சன் இயக்கும் படம், ‘கோலமாவு கோகிலா’. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒரு பெண் வறுமைக்காக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகிறாள். அவர் வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் கதை. போதைப் பொருள் கடத்தும் பெண்ணாக நயன்தாரா நடிக்கிறார்.
டார்க் காமெடி படமாக உருவாகும் இதில் காமெடி நடிகர் யோகி பாபு, நயன்தாராவை ஒருதலையாகக் காதலிப்பது போல் கதை அமைக்கப் பட்டுள்ளது. இதற்கானப் பாடலைதான் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். அந்தப் பாடல், ’அவ முன்னால நிற்கிறேன், அவ கண்ணால சொக்குறேன், நான் தன்னால சிக்குறேன், பின்னால சுத்துறேன், முன்னால சாவுறேன்...’ என்று தொடங்குகிறது. இடையில்,‘எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்திடுச்சுடி, டேட் பண்ணவா, இல்ல சாட் பண்ணவா? கூட சேர்ந்து வாழுற ஆசை வந்திடுச்சுடி, மீட் பண்ணவா, இல்ல வெயிட் பண்ணவா?’ என்று செல்கிறது இந்தப் பக்காவான லவ் பாடல்.
‘படத்துல யோகிபாபுவுக்குத்தான் பாட்டுன்னாலும், சிவகார்த்திகேயன் நடிச்சா எப்படியிருக்குமோ அந்த லுக்லதான் பாட்டு இருக்கும். செம யூத்தா இருக்கும் பாருங்க’ என்கிறது படக்குழு. இந்த வீடியோ பாடலை இன்று காலை வெளியிட்டுள்ளார் அனிருத். யோகிபாபு செம பீலிங்கோடு நயன்தாராவிடம் காதல் சொல்லும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கிறது.