சினிமா துளிகள்|கங்குவா டிரைலர் முதல் வாட்டர் பாக்கெட் பாடல் வரை!
சினிமா துளிகள்
இந்தி திணிப்பு ; ‘ரகு தாத்தா’ படத்தின் பாடல் வெளியீடு!
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படத்தில் இருந்து 'எழுந்து நின்று போரிடு' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டது. சுமன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, கே.ஜி.எஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தி திணிப்பு விவகாரத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
EPIQ திரையரங்குகளில் வெளியாகும் தங்கலான்!
தங்கலான் திரைப்படம் 70 அடி அகலம், 37 அடி உயரமும் கொண்ட திரை உள்ள EPIQ திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கும்போது, பிரம்மாண்டத்தை உணர்வதோடு, துல்லியமான பட காட்சிகளையும் காணமுடியும் என படக்குழு கூறியுள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம், சுதந்தரத் தினத்தன்று வெளியாகிறது. கோலார் தங்க வயல் பின்னணியில் வரலாற்று புனைவாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
20 மில்லியன் பார்வைகளை கடந்த கங்குவா டிரைலர்!
கங்குவா படத்தின் டிரைலர் வெளியான ஒரு நாளில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் சரித்திர புனைவு கதையாக கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அண்மையில் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டனர். டிரைலைர் முழுவதும் சண்டைக் காட்சிகளும், வன்முறைக் காட்சிகளும் நிரம்பிக் கிடக்கின்றன. மேலும் வனத்திற்குள் வாழ்ந்த பழங்கால மனிதர்கள், போர்க்காட்சிகள் என பல இடங்களில் அனிமேஷன் மற்றும் VFX பணிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.
15 மில்லியன் பார்வைகளை கடந்த வாட்டர் பாக்கெட்!
இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் வாட்டர் பாக்கெட் பாடல் யூடியூப்பில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. தனுஷ் இயக்கி, நடித்த ராயன் படத்தில், சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா முரளி இடையே உள்ள காதல் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக இவர்களுக்கு இடையே இடம்பெற்ற வாட்டர் பாக்கெட் பாடல் ரசிகர் மத்திய மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. AR ரஹ்மான் இசையில் கானா காதர் எழுதிய இந்த பாடலை, சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர்.