திரைத்துறைக்கு, அரசு சலுகைகள் செய்ய வேண்டும்: தயாரிப்பாளர்கள், உரிமையாளர்கள் கோரிக்கை
கொரோனா ஊரடங்கால் அதிக பாதிப்பை சந்தித்துள்ள திரைத்துறைக்கு, தமிழக அரசு சில சலுகைகளை வழங்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் கோரிக்கை வைக்கின்றனர். ரசிகர்களின் கொண்டாட்டங்களால் திளைத்த திரையரங்குகள் களையிழந்து காணப்படுகின்றன.
புதிய திரைப்படங்களின் பேனர்களை சுமந்து நின்ற கம்பங்கள் வெறிச்சோடிக் நிற்கின்றன. சென்னையில் உள்ள சில முன்னணி திரையரங்குகள் தங்கள் பார்கிங் ஏரியாக்களை வாடகைக்கு விடும் சூழலும் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் 15 மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால், சினிமா துறையை சார்ந்த வியாபாரம் சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் இந்த சூழலில், திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அத்துடன் ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திரையரங்க உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த ஸ்ரீதர் கூறுகையில், 'சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும், மின்சார கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும், உரிமம் புதுப்பித்தலில் ஆட்டோ ரெனிவல் முறையை அமல்படுத்த வேண்டும்' போன்ற கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டுள்ளளது. மேலும் அரசு அனுமதி வழங்கினால் உடனடியாக திரையரங்களை திறக்க உரிமையாளர்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தமிழ் சினிமாவில் அனைத்து வேலைகளும் முடிவடைந்து சிவாகார்திகேயனின் 'டாக்டர்', விஜய்சேதுபதியின் 'லாபம்' உள்ளிட்ட சுமார் 70 படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இதன் மூலம் மட்டுமே 1,500 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளன என நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.சிவா கூறுகிறார். அத்துடன் சினிமா வியாபாரம் மற்ற தொழில்கள்போல் அத்தியாவசிய தேவை இல்லை. எனவே மக்கள் திரையரங்குக்கு வர அச்சம் காட்டுவார்கள்.
திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் சுமார் இரண்டு மாதங்களுக்கு பரீட்சார்த்த முறையிலேயே படங்களை வெளியிட வேண்டிய நிலை உள்ளது என்றும் அவர் தெரிவிக்கிறார். மேலும் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், சில திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்குகளை மூட திட்டமிட்டிருக்கின்றனர். இதனால் திரையரங்குகள் திறப்பதே தீர்வு என்றும், அதன் மூலமே சினிமா துறையை மீட்கப்படும் என்றும் சிவா அரசிற்கு வேண்டுகோள் வைக்கிறார்.
பெரும் பின்னடைவை சந்தித்துள்ள தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியானால்தான் திரையுலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அது தீபாவளிக்கு பிறகே நிகழும் என்றும் தெரிவிக்கின்றனர்.
- செந்தில்ராஜா. இரா