ரகசியமாக சென்னைக்கு திடீரென வந்து சென்ற ஹாலிவுட் இயக்குநரின் சொகுசு விமானம் !
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் தனி விமானம் கடந்த ஞாயிற்றுகிழமை சென்னை விமானநிலையத்திற்கு வந்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ‘டெனட்’ என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 7 நாடுகளில் நடைபெறுகிறது. அந்தவகையில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க நோலன் தனது தனி விமானம் ‘கிரிஸ்டல் ஸ்கை(Crystal Skye)’ மூலம் இந்தியா வந்தார்.
இந்த விமானம் கடந்த ஞாயிற்றுகிழமை சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பான செய்தியை ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் இந்த விமானத்திலுள்ள சொகுசு வசதிகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த விமானம் போயிங் 777 எல்.ஆர் வகையை சேர்ந்தது. இது உலகிலேயே மிகவும் சொகுசு வசதிகள் கொண்ட தனி விமானமாகும். இந்த விமானம் ஒரு சொகுசு கப்பலில் பயணிப்பது போல் வசதிகளை உடையது.
இதில் வைஃபை வசதி, பொழுதுபோக்கு வசதி, படங்கள், பாடல்கள், நேரலை தொலைக்காட்சி, மேற்கத்திய நாடுகளின் உணவுகள், ஐஸ்கிரீம் கருவி, ஓவன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த விமானத்தை கேண்டிங் ஹாங்காங் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விமானத்திற்கு நான்கு விமான கேப்டன்கள் மற்றும் 19 கேபின் ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு பல உலக மொழிகளில் உரையாட தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமான எதற்காக சென்னை வந்தது என்பது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கருத்து தெரிவிக்காத நிலையில் மும்பை விமான நிலைய அதிகாரிகள் ‘தி இந்து’ நாளிதழுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி இவ்விமானம் பார்கிங் செய்ய சென்னை வந்ததாகவும், கேபின் ஊழியர்கள் மற்றும் கேப்டன்கள் ஓய்வு எடுக்க சென்னை வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விமானம் கடந்த திங்கட்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டு மும்பை சென்று அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.