துல்கர் சல்மான் நடிக்கும் “ஹாய் சினாமிகா” படப்பிடிப்பு துவங்கியது.
நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதீதி ராவ் ஹைதரி ஆகியோர் நடிக்கும் திரைப்படத்திற்கு “ஹாய் சினாமிகா” என பெயரிடப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான், காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கும் திரைப்படமொன்றை பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கப் போவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்புகள் வெளியாகின. அந்தப் படத்திற்கு “ஹாய் சினாமிகா” என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. ஜியோ ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
அடிப்படையில் பிருந்தாவின் குடும்பமே நடன குடும்பம் என்று தான் சொல்ல வேண்டும். நடன இயக்குநர்கள் கலா, கிரிஜா ஆகியோரின் சகோதரிதான் இவர். கார்த்திக் நடித்த 'நந்தவன தேரு' படம் மூலம் நடன இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிருந்தா, சுந்தர்.சி இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, மணி ரத்னம் இயக்கிய இருவர், கடல் மற்றும் ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்டோர் நடித்த படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய பிருந்தா, தற்போது இயக்குநாக அவதாரம் எடுக்கவுள்ளார்.
இதுவரை பாடலாசிரியராக இருந்து வந்த மதன் கார்க்கி “ஹாய் சினாமிகா” படத்தின் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. அப்பூஜையில் மணிரத்தினம், கே.பாக்யராஜ், குஷ்பூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிருந்தா இப்படத்தை ஒரே ஸெடியூலில் முடிக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
தமிழில் ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள நடிகரான துல்கர் சல்மான் தமிழில் வாயைமூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஓகே கண்மணி, நடிகையர் திலகம், சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இது தமிழ் சினிமாவில் அவருக்கு ஐந்தாவது படம் ஆகும்.